Tuesday 25 July 2017

வேலை இழப்பால் தடுமாறும் தமிழக ஐ.டி.துறை!

வேலையிழப்பால் தடுமாறும் ஐ.டி. துறை: தவிக்கும் இளைஞர்களுக்கு மாற்று வழி என்ன?



வேலையிழப்பால் தடுமாறும் ஐ.டி. துறை: தவிக்கும் இளைஞர்களுக்கு மாற்று வழி என்ன?
படத்தின் காப்புரிமை Getty Images
தற்போது வரை இந்திய அரசு தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள வேலை இழப்புகள் பற்றிய அதிகாரபூர்வமான புள்ளிவிவரங்களை வெளியிடவில்லை. இதுவரை இல்லாத அளவில் தகவல்தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது உரிமையைக் கேட்க கூட்டங்கள் நடத்துவதும், செய்தியாளர் சந்திப்புகள் நடத்துவதும் அந்த துறைக்கு மிகவும் புதிதாக உள்ளது.
தமிழகத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவன அதிகாரிகள், தொழிலாளர்கள், பொறியியல் துறையில் உள்ளவர்கள் கள நிலவரத்தை பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டனர்.

வேலையிழப்பிற்கு வித்திட்டது அமெரிக்காவா?

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது தேர்தல் அறிக்கையில் சொன்னபடி, வெளிநாட்டினரை வேலைக்கு எடுக்க அதிக கட்டுப்பாடுகள் கொண்டுவந்தார்.

அமெரிக்காவை தொடர்ந்து பிரிட்டனில் நடந்த பிரெக்ஸிட்(Brexit), சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா என பல நாடுகளிலும் வெளிநாட்டினருக்கு வேலை அளிப்பதில் கடும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன.

வேலையிழப்பால் தடுமாறும் ஐ.டி. துறை: தவிக்கும் இளைஞர்களுக்கு மாற்று வழி என்ன?
படத்தின் காப்புரிமை AFP

தகவல் தொழில்நுட்பத் துறையில் பெருமளவு வேலைகளை இந்தியர்கள் பெற்றிருந்தனர், அதன் நிழலாக, இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் அமெரிக்காவில் தங்களது அலுவலகங்களை திறந்தன.

வெளிநாட்டு நிறுவனங்களின் மென்பொருள் தேவைகளை இந்திய சந்தைகள் பூர்த்திசெய்து வந்தன.
தற்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தேவைகள் மாறிவருவதும், அந்த நாடுகளில் ஏற்பட்ட அரசியல் சூழல் மாற்றங்களும், இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் அஸ்திவாரத்தை உலுக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், இந்திய நிறுவனங்கள் தங்களது வேலை செய்யும் முறையை உடனடியாக மாற்ற வேண்டிய இக்கட்டான சூழலில் உள்ளன என்றும் கூறப்படுகிறது.

தங்களது நிறுவனங்களை காப்பாற்றவும், தொழில் போட்டியில் தாக்குப் பிடிக்கவும், தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் சம்பளத்தை பெருஞ்சுமையாக நிறுவனங்கள் எண்ணுகின்றன.


வேலையிழப்பால் தடுமாறும் ஐ.டி. துறை: தவிக்கும் இளைஞர்களுக்கு மாற்று வழி என்ன?
படத்தின் காப்புரிமை URIEL SINAI
இந்தச் சூழலில் ஐ.டி தொழிலாளர்களை வேலையைவிட்டு அனுப்ப பலவிதங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தொழிலாளர்களை விரட்டும் யுத்திகள்

சென்னையில் உள்ள முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த மனிதவள மேலாண்மை துறை தலைமை அதிகாரி ஒருவர், வேலையை விட்டு நீக்குவதற்குப் பின்பற்றப்படும் யுக்திகள் பற்றி பிபிசி தமிழிடம் விவரித்தார்.

பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி, ''ஒவ்வொருவரின் சம்பளத்தில் மூன்று முக்கிய பகுதிகள் இருக்கும். ஊழியரின் அடிப்படை சம்பளம், அவரின் தனிப்பட்ட திறமை அல்லது அவரின் செயல்பாட்டிற்கு அளிக்கப்படும் தொகை மற்றும் நிறுவனத்தின் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு தரப்படும் தொகை. இதில் நிறுவனங்கள் சந்திக்கும் இழப்பால், மூன்றாவது பகுதி சம்பளத்தை எதிர்பார்க்கமுடியாது. திறமைக்கு அளிக்கப்படும் தொகையில்தான் பெருமளவு சம்பளம் குறைக்கப்படுகிறது,'' என்றார்.


வேலையிழப்பால் தடுமாறும் ஐ.டி. துறை: தவிக்கும் இளைஞர்களுக்கு மாற்று வழி என்ன?
படத்தின் காப்புரிமை Getty Images
 இந்த சம்பளக் குறைப்பை நடைமுறைப்படுத்த, அனுபவம் வாய்ந்த தொழிலாளர்களுக்கு கூட மூன்றுமாத காலத்திற்குள் தங்களது திறமையை நிரூபிக்க வேண்டும் என்று கூறி ஒரு வேலைத் திட்டம் அளிக்கப்படுகிறது. அவ்வாறான தகுதியை அவர் பெறவில்லை என்று கூறி வேலையைவிட்டு அனுப்பும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்கிறார்.

இயந்திரங்களால் வேலையிழக்கும் மனிதர்கள்

இதுமட்டுமல்லாமல், ஆட்டோமேசன் (automation) என்று சொல்லப்படும் தானியங்கி முறையில் செயல்படும் மென்பொருள் தயாரிப்புக்கு முக்கியத்துவம் பெருகிவிட்டது. இயந்திரங்கள் மனிதர்களின் வேலைகளை செய்துவிடுவதால், இந்த முறை நிறுவனங்களுக்கு பெரும் லாபமாக அமைகிறது என்றும் கூறப்படுகிறது.

''மென்பொருள் தயாரிப்பின் ஒரு பகுதியாக, சர்வர், அப்ளிகேசன் போன்றவற்றைச் சரிபார்க்க முன்னர் சுமார் ஐந்து நபர்கள் தேவைப்பட்டனர். தற்போது ஒரே ஒரு இயந்திரம் அந்த வேலைகளை செய்ய போதுமானதாகிவிட்டது. இது போன்ற ஆட்குறைப்பு தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது,'' என்றார் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி.

மேலும் லேட்ரல் என்ட்ரி(lateral entry) என்று சொல்லப்படும் முறையில், சில ஆண்டுகள் சிறிய ஐ டி நிறுவனங்கள் மற்றும் புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், தங்களது அனுபவத்தைக் கொண்டு பெரிய நிறுவனங்களில் வேலைக்கு சேருவது என்பது பலருக்கும் நல்ல சம்பளத்தில் வேலை கொடுத்தது. தற்போது அந்த வகையில் ஆட்களை வேலைக்கு எடுக்கும் முறையைப் பல நிறுவனங்கள் முற்றிலுமாக நிறுத்திவிட்டன என்றார்.


வேலையிழப்பால் தடுமாறும் ஐ.டி. துறை: தவிக்கும் இளைஞர்களுக்கு மாற்று வழி என்ன?
படத்தின் காப்புரிமை GERARD JULIEN/AFP/Getty Images
ஒரு சில நிறுவனங்கள் பகுதி நேர வேலைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. இதன்மூலம் ஊழியர்களுக்கு அளிக்க வேண்டிய சலுகைகளை குறைக்க முடியும், அதேபோல நிறுவனத்தின் தேவைக்கு வேலைக்கு ஆட்கள் இருப்பார்கள் என்ற நிலையும் இருக்கும் என்றார் அந்த அதிகாரி.
பெண்களை மீண்டும் சமையலறைக்கு அனுப்பும் முயற்சி?

ஐ.டி. துறையில் வேலையில் உள்ளவர்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் பெண்கள் என்று கூறப்படுகிறது. இந்த வேலையிழப்பு பெண்களின் தோளில் பெரிய சுமையை வைத்துள்ளது என்று கூறப்படுகிறது.

படித்த முதல் தலைமுறை பெண்களுக்கு ஐ டி நிறுவனங்கள் அளித்த வேலை, தொடக்க நிலையில் கொடுக்கப்பட்ட பெரிய சம்பளம் போன்றவை பல நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பங்களைக் கை தூக்கிவிடும் நடவடிக்கையாக அமைந்தது.

தனது வேலையை அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் எதிர்கொள்ள வேண்டிய பொருளாதார சிக்கல், வீடு, கார் என தங்களது தேவைகளுக்கு ஒவ்வொரு மாதமும் செலுத்தப்படவேண்டிய தவணைகள் என மீளாத்துயரில் பெண்களை இந்த வேலையிழப்பு தள்ளியுள்ளதாக கூறுகிறார்கள்.
ஐ டி துறையில் பத்தாண்டுகள் வேலை செய்த பின்னர் தகவல்தொழில்நுட்ப பணியாளர்கள் அமைப்பை (Forum for IT Employees- FITE) நடத்திவரும் பரிமளாவிடம் இதுகுறித்து பேசினோம்.

'மற்ற துறைகளைப் போல ஐ டி நிறுவங்களில் தலைமைப் பொறுப்பில் குறைந்த எண்ணிக்கையில்தான் பெண்கள் உள்ளனர். அடிமட்ட வேலைகளான 'சோதனை (testing) மற்றும் பராமரிப்பு (maintenance) என்று சொல்லப்படும் வேலைகளை செய்ய இனி ஆட்கள் தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரிவுகளில் வேலையில் இருந்த பெண்கள் மீண்டும் சமையலறைக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது,'' என்கிறார் பரிமளா.
தற்போது வேலையில் உள்ளவர்களை நவீன தொழில்நுட்பத்தில் வேலை செய்வதற்கு ஏற்றவர்களாக தரம் உயர்த்த தேவையான பயிற்சிகளை ஐடி நிறுவனங்கள் அளிக்கவேண்டும் என்றார் பரிமளா.


வேலையிழப்பால் தடுமாறும் ஐ.டி. துறை: தவிக்கும் இளைஞர்களுக்கு மாற்று வழி என்ன?
படத்தின் காப்புரிமை Uriel Sinai/Getty Images
ஐடி துறையில் உள்ள மாற்றங்களை விவாதிக்க சமீபமாக சென்னை நகரத்தில் பல்வேறு கூட்டங்கள் நடைபெற்றன.

வேலையிழப்பால் ஏற்படும் வேலைவாய்ப்பு

சென்னையில் நாஸ்காம் (NASSCOM) சார்பாக நடத்தப்பட்ட மனித வள மேலாண்மை அதிகாரிகள் கூட்டத்தில் பேசிய நாஸ்காம் தலைவர் ஆர்.சந்திரசேகர் இந்திய தகவல்தொழில்நுட்ப துறை சுமார் 154 பில்லியன் டாலர் தொழிலாக, சுமார் 3.9 பில்லியன் தொழிலாளர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. இதே மதிப்பீட்டில் தொழில் நீடித்தால், நிச்சயம் குறைந்த ஆட்களை மட்டுமே பணியில் வைத்திருக்கமுடியும் என்றார்.

மாற்றத்திற்கு ஏற்றவாறு நிறுவனங்கள் தொழிலார்கள் புதிய திறன்களைப் பெறுவதற்கு வாய்ப்பு தரவேண்டும் என்றார் சந்திரசேகர்.

தகவல் தொழில்நுட்ப துறையில் ஏற்படும் வளர்ச்சியின் வேகத்திற்கு ஏற்றவாறு தொழிலார்கள் தங்களை தகவமைத்துக்கொள்ள வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். அவ்வாறு மாற்றத்தை ஏற்றுக்கொண்டு பயணித்தால் மட்டுமே வேலை இழப்புகளை தவிர்க்க முடியும் என்றார்.

பொறியியல் படிப்பின் தரம்

வேலை இழப்புகள் ஒருபுறம் என்றாலும் பொறியியல் படிப்பில் சேருவதற்கு மாணவர்கள் தொடர்ந்து விண்ணப்பித்துக் கொண்டுதான் உள்ளனர்.


வேலையிழப்பால் தடுமாறும் ஐ.டி. துறை: தவிக்கும் இளைஞர்களுக்கு மாற்று வழி என்ன?
படத்தின் காப்புரிமை FINDLAY KEMBER/AFP/Getty Images
சந்தையின் தேவைக்கு ஏற்ப நம் மாநிலத்தில் உள்ள கல்விக்கூடங்களின் தரத்தையும் உடனடியாக உயர்த்தவேண்டும் என்ற கருத்தும் நிலவுகிறது.

பல சந்தர்ப்பங்களில் பொறியியல் படிப்புகள் பற்றிப் பேசியுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஆனந்தகிருஷ்ணன், தமிழகத்தில் உள்ள ஐம்பது சதவீத கல்லூரிகள் தரம் குறைந்தவையாக இருப்பதாகவும், உடனடியாக அவற்றை மூடவேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

''அரசும், ஐடி நிறுவனங்களுமே பொறுப்பு''

கடந்த மூன்று ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையில் ஐ.டி துறையில் வேலையில்லாமல் இருப்பதற்கான விதை இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தூவப்பட்டது என்கிறார் டெக்னோக்ரேட்ஸ் இந்தியா நிறுவன இயக்குநர் மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசகர் நெடுஞ்செழியன்.


''மற்ற எந்த மாநிலங்களையும் விட, தனியார் கல்வி நிறுவனங்கள் பெருமளவு தமிழகத்தில் காலூன்றும் சூழல் இருந்தது. தமிழக அரசும் 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் தேவையா என்று யோசிக்காமல், தனியார் கல்வி நிறுவனங்கள், அரசியல் பின்னணி உள்ளவர்கள் கல்லூரிகள் நடத்த அனுமதி வழங்கியது பெரிய மோசடி,''
என்கிறார் நெடுஞ்செழியன்.


''பெற்றோர்கள் பலரும் தங்களது குழந்தைக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கவேண்டும் என்று சொத்துகளை விற்று படிக்க வைத்தனர். ஐ டி நிறுவனங்கள் தாங்கள் முடிவு செய்த கல்லூரிகளுக்கு மட்டும் சென்று, விரும்பியவாறு தேர்வு செய்தனர். முடிவு, பிற கல்லூரிகளில் படிக்கும் தகுதி வாய்ந்த மாணவர்கள் பொறியியல் படித்துவிட்டு, வேலையில்லாமல் அல்லது சம்பந்தமில்லாத வேலைக்கு செல்ல வேண்டிய அவலம் நேர்ந்தது,'' என்று விவரிக்கிறார் நெடுஞ்செழியன்.

பொறியியல், தகவல் தொழில்நுட்ப துறையில், முன்னேற்றம் தேவைப்படுகிறது, இந்தியாவில் அதற்கான தேவை அதிகமாக உள்ளது, அதுவும் நம் நாட்டின் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக, வெறும் சம்பளம் தரும் வேலையை பெறுவதற்கான கல்வியை கொடுத்தால் நம் முன்னேற்றம் பிறரை நம்புவதாக மட்டுமே இருக்கும் என்று முடித்தார் நெடுஞ்செழியன்.

No comments:

Post a Comment

Israel assassinate 18 IRGC members since December!

Israel strikes Iran consulate in Syria’s capital Damascus:  What we know Iran has promised a response after an alleged Israeli attack on its...