Tuesday 15 April 2014

சிறிலங்கா இறுதிப்போரில் இந்தியப்படைகள் !


சிறிலங்கா இறுதிப்போரில் இந்தியப்படைகள் பங்கேற்பு – விசாரணை நடத்தக் கோரி இந்திய உயர்நீதிமன்றில் மனு


[ செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014, 05:19 GMT ] புதினப் பலகை [ அ.எழிலரசன் ]


சிறிலங்காவில் நடந்த இறுதிக்கட்டப் போரில், இந்தியப் படையினர் நேரடியாகப் பங்கெடுத்துள்ளதாகவும், இந்திய நாடாளுமன்றத்தினதோ, குடியரசுத் தலைவரினதோ ஒப்புதலின்றி இந்தியப் படையினர் சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறித்து சிறப்பு விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

புதுடெல்லியைச் சேர்ந்த, டெல்லி தமிழ் சட்டவாளர் சங்கத்தின் செயலாளரான ராம்சங்கர் என்ற சட்டவாளரே இந்த மனுவைச் சமர்ப்பித்துள்ளார். 


கடந்தவாரம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த மனு மீதான விசாரணை வரும் நாளை மறுநாள் (17-04-2014)நடத்தப்படவுள்ளது. 


இந்த (இந்தியப் படை) நடவடிக்கைக்கு சீக்கிய அதிகாரி ஒருவரே தலைமை தாங்கியதாகவும், இந்தியப் படையினர் சிலர் போரில் காயமடைந்ததாகவும் இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 


சிறிலங்காவில் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்பட்ட உள்நாட்டுப் போரில், சிறிலங்கா படைகளுக்கு உதவுவதற்காக 2008 ம், 2009 ம் ஆண்டுகளில் இந்திய இராணுவ, கடற்படை, மற்றும் விமானப்படையினர் சட்டவிரோதமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 


போர்ப் பிரகடனம் ஒன்று செய்யப்படாமல்- இந்திய ஆயுதப்படைகளின் பிரதம தளபதி என்ற வகையில் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்படாமல்- அரசியலமைப்பின் 246வது பிரிவுக்கு அமைய, நாடாளுமன்ற அனுமதி பெறப்படாமலேயே இவர்கள் சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் இந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 


அனைத்துலக மனிதாபிமான முன்னெடுப்புகளுக்காக தாம் பல முறை சிறிலங்காவுக்குச் சென்று வந்துள்ளதாக சட்டவாளர் ராம் சங்கர் தெரிவித்துள்ளார். 


கிளிநொச்சி, முல்லைத்தீவு மீதான தாக்குதலின் போது தலைப்பாகை கட்டிய இந்திய அதிகாரி ஒருவர் ஆயுதப்படைகளுக்கு தலைமை தாங்குவதை தாம் கண்டதாக, புகலிடக் கோரிக்கையாளர்கள் அனைத்துலக விசாரணையில் 

சாட்சியமளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

போர்ப் பிரகடனம் செய்யப்படாமலேயே, சிறிலங்கா படைகளுக்கு ஆதரவாகவும், உடந்தையாகவும், இந்தியப் படையினரை சிறிலங்காவில் நிறுத்தியுள்ளனர். 


இராணுவ விவகாரங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட நாடாளுமன்றத்துக்கும் இது வெளிப்படுத்தப்படவில்லை. 


இந்தியாவின் பாதுகாப்பு தவிர, வேறு எந்தக் காரணத்துக்காகவும் இந்திய ஆயுதப்படைகளை பயன்படுத்த இந்திய அரசியலமைப்பில் அதிகாரம் அளிக்கப்படவில்லை. 


உள்நாட்டு போரில், தமிழ்ப் போராளிகளுக்கு எதிராக, சிறிலங்கா ஆயுதப்படைகளுக்கு உதவியாக, இந்திய ஆயுதப்படைகள் 2008, 2009 காலப்பகுதியில் இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். 


இதுகுறித்து ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த சுதந்திர அனைத்துலக நிபுணர் குழுவின் அறிக்கையில் 56வது பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இந்த அறிக்கை 2011 மார்ச் 31ம் நாள் வெளியிடப்பட்டுள்ளது.” என்றும் இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 


சிறிலங்காவில் உள்ள இந்திய வம்சாவளியினர் உள்ளிட்ட தமிழர்களுக்கு எதிரான இந்திய ஆயுதப்படைகளின் கூட்டுப் பங்கு தொடர்பாக, விசாரிக்க இந்திய உயர்நீதிமன்றம் தனது கட்டுப்பாட்டின் கீழ் சிறப்பு விசாரணைக் குழுவொன்றை அமைக்க வேண்டும் என்றும், அது சுயாதீனமாக நடத்தப்படுவதை கண்காணிக்குமாறும், சட்டவாளர் ராம் சங்கர் தனது மனுவில் கோரியுள்ளார். 


சிறிலங்காவில் தமிழ் சிறுபான்மையினரின் உயிர்கள், உடமைகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்து, விசாரித்து, அதில் சம்பந்தப்பட்டவர்களை சிறப்புத் தீர்ப்பாயம் முன்பாக நிறுத்தி விசாரிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக நட்டஈடு வழங்க அவர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. 


இந்த மனுவில், பாதுகாப்பு, வெளிவிவகார, மற்றும் உள்துறை அமைச்சுக்களை பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.

===================

No comments:

Post a Comment

Xi meets Sri Lankan PM

This handout photograph released by Sri Lanka Prime Minister’s Office on March 27, 2024 shows Sri Lanka’s Prime Minister Dinesh Gunawardena ...