Tuesday 26 February 2013

முருங்கன் செம்மண் தீவில் மன்னார் விவசாயிகள் போராட்டம்

* நிர்ணயிக்கப்பட்ட விலையில் நெல் கொள்வனவு செய்!
* சந்தை வாய்ப்பை அதிகரி!
* விவசாயிகளுக்கு எரிபொருள் மானியம் வழங்கு!
* விவசாயிகளுக்கு வரட்சி மற்றும்
 வெள்ள நிவாரணங்களை உடன் வழங்கு!
*வங்கிக் கடனை உடன் இரத்துச்செய்!
*மீள்குடியமர்வையும் வாழ்வாதார வசதிகளையும் உறுதி செய்!
 
மன்னார் மாவட்ட விவசாய சம்மேளனம்
 
மன்னார் மாவட்ட விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட விவசாயிகள்,  மூன்று பிரதான கோரிக்கைகளை முன் வைத்து இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இன்று காலை 9 மணியளவில் மன்னார், முருங்கன், செம்மண் தீவு விளையாட்டு மைதானத்தில் இவ் உண்ணாவிரதப் போராட்டம்
முன்னெடுக்கப்பட்டது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,
சிவசக்தி ஆனந்தன், எஸ்.வினோ நோகராதலிங்கம், மக்கள் விடுதலை முன்னனியின் உறுப்பினர் சாமிவேல் செல்வக்குமார், மன்னார் நகர சபை,
மன்னார், நானாட்டான், மாந்தை மேற்கு ஆகிய பிரதேச சபைகளின் தலைவர்கள், உப தலைவர்கள், உறுப்பினர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதி நிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
 
 
நிர்ணயிக்கப்பட்ட விலையில் நெல் கொள்வனவு செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு எரிபொருள் மாணியம் வழங்கப்பட வேண்டும், விவசாயிகளுக்கு வரட்சி மற்றும் வெள்ள நிவாரணங்கள் உடன் வழங்குவதோடு வங்கிக் கடனை உடன் இரத்துச்செய்ய வேண்டும்
 
என்ற மூன்று அம்சக்கோரிக்கைகளை முன் வைத்து உண்ணாவிரதப் போராட்டம் இடம் பெற்றது. இதன்போது ஜனாதிபதியிடம் ஒப்படைக்குமாறு மகஜர் ஒன்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்திரவிடம் .
கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த யுத்த பேரழிவின் போது மோசமான இழப்புக்களுக்கும், பின்னடைவுகளுக்கும், முகம் கொடுத்த வன்னி பெருநிலப்பரப்பின் ஒருபகுதியினர்,
மன்னார் மாவட்ட விவசாயிகளாவர்.
 
 
2006ஆம் ஆண்டு மகா காலப்போக அறுவடை நெருங்கிய காலப்பகுதியில் யுத்தம் தீவிரப்படுத்தப்பட்டதால் விவசாயத்தில் பெருமளவு முதலீட்டைச்
செலவிட்ட நாம்  அதனைப்பெற அறுவடை செய்ய முடியாது அவற்றை முழுமையாக கைவிட்டு இடம்பெயர வேண்டிய அவலத்திற்குள்ளானோம்.
வங்கிகளிடமும், தனியாரிடமும், விவசாயத்திற்காக பெறப்பட்ட கடன்கள் மீளச்செலுத்த முடியாமலும், விவசாய செலவுக்காக அடைவு வைத்த
நகைகள் மீட்க முடியாமலும், உள்ளன.
 
2010 மீள்குடியமர்த்தப்பட்ட நாம் முதலீடு எதுவும் இல்லாமையால் அவ்வாண்டு காலபோகச் செய்கையில் ஈடுபடமுடியாத அவலத்திற்கு உள்ளானோம்.
 
எனினும் 2011ஆம் ஆண்டில் ஓரளவு விவசாயத்தில் ஈடுபட்டோமாயினும் அறுவடை செய்த நெல்லும் சந்தைப்படுத்த வாய்ப்பு இல்லாமையால்
தனியாருக்கு குறைந்த  விலைக்கு விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால், முதலீட்டை மீட்க முடியாது கடனில் தத்தளித்தோம்.
 
2012இல் செய்த வேளாண்மை ஒருபுறம் நீர்ப் பற்றாக்குறையாலும், வெள்ளப் பெருக்கினாலும், அழிவுக்குட்பட்டதால் இவ்வாண்டிலும் பாரிய
நட்டத்தையே சந்தித்தோம்.
 
இக்காலத்தில் எரிபொருள் விலை உயர்வு, விதை நெல் தட்டுப்பாடு, பசளை வகைக்கான மானியங்கள், வழங்கப்படாமை போன்ற காரணங்களால்
உற்பத்திச் செலவைக் கூட மீட்டெடுக்க முடியாத நிலைக்குள்ளானோம்.

இக்காரணங்களாலும் சந்தைபடுத்தும் வாய்ப்பு எம்மாவட்டத்தில் இல்லாமையாலும், உள்ளீடுகளுக்கான மானியங்கள் இல்லாமையாலும், எரிபொருள்
விலை அதிகரிப்பாலும், உற்பத்திச் செலவை மீட்டெடுக்க முடியாத நிலையில் தனியார் சுரண்டல் காரணமாக 66 கிலோ மூடைக்கு பதிலாக 75 கிலோ
மூடைக்கு வழங்கப்பட்டதோடு, நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு குறைவாகவே விற்கவேண்டிய  அவலம் எமக்கு ஏற்பட்டது.

மீள்குடியமர்வின் பின் எமக்கு வழங்கப்பட வேண்டிய வீட்டுவசதி, வாழ்வாதார வசதி, போன்ற நிவாரண வசதிகள் எவையும், எமக்கு வழங்கப்படாத
நிலையில் எமது முயற்சிகளுக்கு எதுவித பலனும் பெற முடியாத அவலத்திற்கும் உள்ளாகியுள்ளோம்.
 
எனவே இவற்றை கருத்தில் கொண்டு கீழ்வரும் குறைந்த பட்ச நிவாரணங்களையாவது, உடனடியாக வழங்கி உதவுமாறு பணிவுடன் வேண்டி ஒர் அடையாள உண்ணாவிரதத்தை மேற்கொண்டு இக்கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.
 
 
வங்கி கடன்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்.
அடைவு வைக்கப்பட்ட நகைகளுக்கான வட்டிகளை ரத்து செய்வதோடு மீட்புக்காலத்தை நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எரிபொருள் விலை
உயர்வுக்கெதிராகவும், விவசாய உள்ளீடுக்காகவும், உரிய மானியம் வழங்க வேண்டும். நெல்லுக்குரிய தரமான விலை நிர்ணயம் செய்து உறுதிப்படுத்தப்பட வேண்டும். சந்தை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும்.
விதைநெல் உற்பத்திக்கு ஊக்கமளிப்பதுடன் உற்பத்தி செய்யப்பட்ட விதை நெல்களை அத்தாட்சிபடுத்தும், உத்தியோகஸ்தர்களின் சேவையை அதிகரிக்க வேண்டும்.
 
வறட்சி, வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பயிர் பாதிப்புக்குள்ளாகும் போது, காப்புறுதி செய்தவர்களுக்கு காப்புறுதி தொகைகளை தாமதமின்றி வழங்க வேண்டும்.

மேற்படி கோரிக்கைகளின் மீது விரைவான நடவடிக்கையெடுக்குமாறு மன்னார் மாவட்ட விவசாயிகளான நாம் பணிவுடன் வேண்டுகின்றோம்' என
குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

No comments:

Post a Comment

Why are foreign envoys making a beeline to the JVP?

  T he JVP misread the invite as the Indians had acknowledged that the party would be the next government in waiting and Anura Kumara, the p...