Tuesday 15 January 2013

வீரக் குழந்தை ரிசானா நினைவாக: மூதூரிலிருந்து எம்.பி.பைறூஸ்


ரிசானா நினைவாக: மூதூரிலிருந்து எம்.பி.எம்.பைறூஸ்

ரிஸானாவின் குடிசையில் கண்ணீர் சிந்தும் மக்கள் வெள்ளம்!
மூதூர் ஷாபி நக­ரி­லுள்ள ரிஸானா நபீக்கின் குடி­சையைச் சென்­­டைந்­­போது சனிக்­கி­ழமை மாலை 3 மணி­யையும் தாண்­டி­யி­ருந்­தது.

குடி­சையைச் சூழ பெருங் கூட்டம். மௌனம் குடி­கொண்­டி­ருந்த அந்த வளவில் கரை புரண்­டோ­டிய கண்ணீர் வெள்­ளத்­தினால் ரிஸா­னாவின் குடி­சையே கரைந்­து­வி­டும் ­போ­லி­ருந்­தது.

குடி­சைக்கு வெளியே அமைக்­கப்­பட்­டி­ருந்த சிறு கொட்டில் ஒன்­றின்கீழ் போடப்பட்டிருந்த சாக்குக் கட்­டிலில் தூங்கிக் கொண்­டி­ருந்தார் ரிஸா­னாவின் தந்தை முகம்­மது நபீக். ரிஸா­னாவின் மரணச் செய்தி கேட்டு தந்தை நபீக் மார­டைப்­பினால் மர­ணித்­து­விட்­­தாக வதந்தி ஒன்று நாடு முழு­வதும் வேக­மாகப் பரவிக் கொண்­டி­ருந்த நிலை­யி­லேயே நான் அவரைச் சந்­தித்தேன். மகளின் மறை­வினால் மூன்று நாட்­­ளாக தூக்­கத்தைத் தொலைத்­தி­ருந்த அவர் அப்­போ­துதான் சற்று கண்­­யர்ந்து தூங்­கு­­தாக அங்­கி­ருந்­­வர்கள் சொன்­னார்கள். அவர் கண்­வி­ழிக்கும் வரை அங்­கேயே காத்­தி­ருந்தேன்.

"
ரிஸானா கடும் பயந்த சுபாவம் கொண்­டவ. ஸ்கூலில் கூட யாரும் அடிச்சா அவ திருப்பி அடிக்­­மாட்டா. கை நீட்­­மாட்டா. ஊட்ட வந்­துதான் சொல்­லுவா.. அவ ஒரு அமை­தி­யான புள்ள.
குடும்பக்கஷ்­டத்­தா­லயும் தம்பி தங்­கச்­சி­மார படிக்க வைக்­கணும் என்­டும்தான் அவ சவூ­திக்கு போனா... அந்த நேரத்­துல என்­னால தொழி­லுக்குப் போக ஏலாத நிலை...அங்­கால புலிப் பிரச்­சின....இங்­கால ஆமிப் பிரச்­சின....அல்­லாஹ்தான் அவவ தந்தான்..இப்ப அவனே அவவ எடுத்­துக்­கிட்டான்...."
இதற்கு மேல் அவரால் பேச முடி­­வில்லை.... சுருக்­­மாகக் கதைத்­து­விட்டு மீண்டும் கண்­­யர்­கிறார்.

ரிஸா­னாவின் தாயாரைச் சந்­திப்­­தற்­காக பல மணி நேரம் காத்­தி­ருந்தேன். ஆறுதல் சொல்­­தற்­காக வந்­தி­ருந்த பெண்­களால் நிறைந்­தி­ருந்­தது அந்தச் சிறு குடிசை. அவர்கள் ரிஸா­னாவின் தாயாரைக் கட்­டிப்­பி­டித்து கத­றி­­ழுது கொண்­டி­ருந்­தார்கள். அழு­கு­ரல்­களைத் தவிர வேறு எந்த சப்­தமும் அங்­கி­ருந்து வெளி­­­வில்லை.

போர்வை ஒன்­றினால் போர்த்­தி­­படி ரிஸா­னாவின் தாயார் பரீனா நடுவில் அமர்ந்­தி­ருக்க அவ­ருக்கு வலப் புற­மா­கவும் இடப் புற­மா­கவும் ரிஸா­னாவின் சகோ­­ரிகள் அமர்ந்­தி­ருந்­தார்கள்.

ரிஸா­னாவின் தாயார் பேசத் தொடங்­கினார்...இல்லை இல்லை அழத் தொடங்­கினார்.

அவர் சொல்­வதைக் கேளுங்கள்....

"
என்ட புள்­ளய இழந்­து­போட்டு நான் படு­­பாடு எனக்கு மட்­டும்தான் தெரியும்.

ஒன்­பதாம் ஆண்டு வரயும் படிச்­சிப்­போட்டு உம்மா இதுக்கு மேல என்­னால படிக்க ஏலா..நான் வெளி­நாட்­டுக்கு போய் காசு அனுப்பி தம்பி தங்­கச்­சி­மார படிக்க வைக்கன் என்டு சொன்னா...

எங்­கட குடும்ப கஷ்டம் அப்­படி....புலிப்­பி­ரச்­சி­னை­யால வாப்­பாக்கு ஒழுங்­கான தொழில் இல்ல... ஒருநாள் திண்டா அடுத்த நாளைக்கு திங்க ஏலா..இந்த நில­மை­யி­னா­லதான் நாங்­களும் அவவ அனுப்பி வைச்சம்.

அவ எந்தக் காரணம் கொண்டும் இந்தக் குற்­றத்த செய்­­மாட்டா என்டு நான் சத்­தியம் பண்­ணுவன்.

''
உம்மா நான் அந்தப் புள்­ளய கொலை செய்­­லம்மா.... செய்­யாத குற்­றத்­துக்கு ஏன் உம்மா நான் தண்­டனை அனு­­விக்­கனும்-?'' என்டு கேட்டா.... அந்தக் கேள்­விக்கு என்­னால பதில் சொல்ல முடி­யல...

ஏழரை வரு­ஷமா கல்லை விழுங்­கிக்­கிட்டு கக்க முடி­யா­­ளவு என்ட புள்­ளக்­காக ஏங்­கி­யி­ருக்கன்... ராத்தா எப்­பம்மா வருமா என்டு என்ட புள்­ளயல் கேட்­கு­துகள்.... அதுக்கு நான் என்ன பதில் சொல்­லுவன்...?

ஜனா­தி­­தியே நீங்க ஒரு சரி­யான ஜனா­தி­­தியா இருந்தால் இந்த நாட்­டி­லுள்ள எந்­­வொரு பிள்­ளை­யையும் சவூ­திக்கு அனுப்பக் கூடா. உங்­களக் கெஞ்சிக் கேட்­கிறேன். என்ட புள்ள ரிஸா­னாக்கு வந்த நிலை வேற யாருக்கும் வந்­துடக் கூடா. குப்பை கொட்­டி­னாலும் பர­வால்ல.... இந்த நாட்­டுக்­குள்­ளயே புளப்­புக்கு ஏதா­வது செஞ்சி கொடுங்க...
என்ட புள்­ளய தன்ட புள்ள போல கேட்டு சவூ­திக்கு கடிதம் அனுப்­பின ஜனா­தி­­திக்கு நான் நன்றி சொல்றன். லலித் கொத்­­லா­வல சேர் என்ட புள்­ளக்­காக அவ­ருட காச செல­­ழிச்­சாரு.. அவ­ருக்கு நன்றி சொல்றன்.... டொக்டர் கிபாயா, மஹ்ரூப் சேர், என்ட புள்­ளைக்­காக கஷ்­டப்­பட்ட எல்­லா­ருக்கும் நன்றி சொல்றேன்.

இலங்­கை­யில எனக்குத் தெரி­யாத அத்­தன பேரயும் என்ட புள்ள சவூ­தி­யில இருந்­துக்­குட்டு எனக்குக் காட்­டித்­தந்­தி­ருக்கா... ஜெயி­லுக்­குள்ள இருந்­துக்­கிட்டே அவ என்ன உம்­றா­வுக்கு எடுத்­தி­ருக்கா....

ஜெயில்ல போய் நான் அவவ சந்­திச்சேன்.... அவவ பிரிஞ்சி வரும்­போது ஏன் உம்மா என்ன விட்­டுட்டுப் போரீங்க... எப்ப உம்மா என்ன கூட்­டிட்டுப் போவீங்க என்டு கேட்டா...

கடை­சியா டிசம்பர் 12 ஆம் தேதி அவ என்­னோட போன்ல பேசினா... ''உம்மா எப்ப உம்மா உங்க கையால ஆக்­கின சோற நம்ம குடில்ல இருந்து சாப்­பி­டு­றது....? நீங்க, வாப்பா, தம்பி, தங்­கச்­சிமார் எல்­லா­ரோ­டயும் ஒன்டா இருந்து சோறு திங்­­னும்­போல இருக்­கும்மா'' என்டு சொன்னா.... அந்த ஆசை நிறை­வே­றா­­லேயே என்ட புள்ள போயிட்­டாளே...

என்ட புள்ள இன்னும் உயி­ரோட இருக்கு என்டு நான் நம்­புறன்....அல்லாஹ் என்ட புள்­ளயத் தருவான்.... இந்த மாசம் என்ட புள்ள எனக்கு கோல் எடுக்கும்... அந்தக் கோல் வராட்­டித்தான் நான் என்ட புள்ள மௌத்தாப் போயிட்­டன்டு நம்­புவன்...அது­­ரைக்கும் நான் நம்­­மாட்டேன்..
சவூதிக்­காரன் ஏன் எனக்­குட்ட சொல்­லாம என்ட புள்­ளய கொன்டான்...?

ரிஸா­னாக்கு மரண தண்­டனை என்டு போன்ல மெசேஜ் வந்­துச்சி..அதயும் நான் நம்ப இல்ல... அர­சாங்­கத்­துக்குக் கூட அவன் இன்னும் அறி­விக்­கல்ல..ஏன் அவன் அப்­படிச் செஞ்சான் என்டு கேட்­கிறேன்.... சவூதிக்­காரன் பதில் சொல்­லட்டும் என்­டுதான் காத்­திட்­டி­ருக்­கிறேன்...அதுக்­கப்­புறம் நான் அவ­னுக்கு பதில் சொல்­லுவன்...பாருங்க
...

முழு நாடுமே எண்ட புள்­ளக்­காக துஆ செய்­திச்சி....எல்­லா­ருக்கும் நான் நன்றி சொல்றேன்...

ஏழரை வரு­சமா அவள் என்ட புள்­ளய மன்­னிக்­கல்ல... என்ட புள்ள குற்றம் செஞ்­சாத்­தான அவள் மன்­னிக்­கனும்...என்ட புள்ள குற்றம் செய்­­லயே....

அவள் என்ட புள்­ளய மன்­னிக்­காட்­டியும் நான் அவள மன்­னிக்கன்...!

ரிஸா­னாவின் தம்பி ரிப்கான். வயது 21. துக்கம் தாளாது ஆங்­காங்கே அலைந்து திரிந்து கொண்­டி­ருந்த ரிப்­கானை ஒரு­வாறு தேடிப்­பி­டித்தேன். தனது தந்­தைக்குச் சொந்­­மான வண்டில் மாடு­­ளுக்கு வைக்கோல் போட்டுக் கொண்­டி­ருந்தார். அழு­­ழுது அவ­ரது கண்கள் வீங்கிப் போயி­ருந்­தன. சகோ­­ரியின் மரணச் செய்தி கேட்ட கணம் முதல் ஒழுங்­காகச் சாப்­பிட்­டி­ருக்­­வில்லை என்­பதை அவ­ரது உடல் நிலை காட்­டி­யது.

"
ரெண்டு நாளா மாடு­­ளுக்கு ஒழுங்கா சாப்­பாடு போடல... அதான் வைக்­கோலும் தண்­ணியும் வைக்­கலாம் என்டு வந்தேன்" என்றார்.

தாம் பசியால் வாடி­னாலும் மாடு­­ளுக்கு பசி வந்­து­விடக் கூடாது எனக் கருதும் இரக்க குணம் கொண்ட குடும்­பத்தில் பிறந்த ரிஸா­னாவா நான்கு மாத பச்­சிளம் குழந்­தையைக் கொலை செய்­தி­ருப்பாள்?

ரிஸா­னாவின் குடும்பத்­துக்கு வரு­மானம் தேடிக் கொடுப்­பது அந்த இரண்டு வண்டில் மாடு­­ளும்தான். இப்­போது அந்த மாடு­களும் சோர்­வி­ழந்து கிடக்­கின்­றன ரிஸா­னாவின் இழப்பால்!

ரிஸானா ஏன் வெளி­நாடு போனாள் என்­­தற்கு அவ­ளது குடிசை மட்­டுமே சாட்சி சொல்லப் போது­மா­னது.

ரிஸா­னாவின் குடிசை அமைந்­தி­ருப்­பது ஷாபி நகரின் எல்­லை­யி­லாகும். அவர்­­ளது குடி­சையை ஒட்­டினாற் போல் ஒரு பொலிஸ் காவ­லரண் அமைந்­தி­ருக்­கி­றது. தற்­போது அந்த முகாம் அகற்­றப்­பட்­டு­விட்­டாலும் யுத்தம் நடை­பெற்றுக் கொண்­டி­ருந்த காலப்­­கு­தியில் குறித்த முகாம் மீது விடு­தலைப் புலிகள் அடிக்­கடி தாக்­குதல் நடத்­து­வது வழக்கம்.

குடி­சையைத் துளைத்துக் கொண்டு ஊடு­ருவும் துப்­பாக்கிச் சன்­னங்கள் ரிஸானா குடும்­பத்­தி­னரின் உயிர்­களை எந்­­வொரு நேரத்­திலும் பதம் பார்க்­கலாம் எனும் அச்சம் அவர்­­ளுக்கு இல்­லா­மலா இருக்கும்? அத­னால்தான் ஆறு பேரைக் கொண்ட தனது குடும்பம் பாது­காப்­பாக உயிர்­வாழ கற்­களால் கட்­டப்­பட்ட ஒரு வீடு வேண்டும் என ரிஸானா சிந்­தித்­தி­ருக்­கிறாள்.

ரிஸா­னாவின் தந்தை காடு­­ளுக்குச் சென்று விற­குகள் சேக­ரித்து வரு­­தையே தனது தொழி­லாகக் கொண்­டி­ருந்தார். ஆனால் ஒரு புறம் விடு­தலைப் புலி­களின் அச்­சு­றுத்­­லாலும் மறு­புறம் இரா­ணு­வத்­தினர் தொழி­லுக்குச் செல்ல தடை விதித்­­தாலும் அவரால் குடும்ப வண்­டியை ஓட்ட முடி­­வில்லை. இத­னால்தான் வரு­மா­னத்­திற்கு வழி தேடி ரிஸானா சவூதி அரே­பி­யாவை தெரிவு செய்தாள் என்­கிறார் ரிஸா­னாவின் உற­வி­­ரான முஜீப்.

ரிஸா­னா­வுக்­காக அனு­தா­பப்­படும் பலரும் அவ­ளது குடும்­பத்­திற்கு உதவி செய்ய முன்­வந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். உல­கெங்­கு­மி­ருந்து அழைப்­புகள் வந்த வண்­­மி­ருக்­கின்­றன. உங்­­ளுக்கு என்ன வேண்டும்? எவ்­­ளவு பணம் வேண்டும்? வீடு கட்டித் தரு­கிறோம்.... பிள்­ளை­களைப் படிப்­பிக்க உதவி செய்­கிறோம்.... வேலை­வாய்ப்புத் தரு­கிறோம்....

ஆனால் அனைத்­தையும் நிரா­­ரித்துக் கொண்­டி­ருக்­கிறார் ரிஸா­னாவின் தாய். பிள்­ளையின் பெயரால் நாங்கள் சொகு­சாக வாழ விரும்­­வில்லை. இந்தக் குடி­சைக்­குள்­ளேயே ரிஸா­னாவின் நினை­வு­­ளோடு செத்துப் போக விரும்­பு­கிறேன் என்­கிறார் அவர்.

ஆனாலும் மூதூர் பிராந்­திய இரா­ணுவ கட்­டளைத் தள­பதி கேர்ணல் விகும் லிய­னகே உட­­டி­யா­கவே செயலில் இறங்­கி­விட்டார். ரிஸா­னாவின் குடும்­பத்­திற்­கென வீடு ஒன்றை நிர்­மா­ணிப்­­தற்­கான பணி­களை அவர் தொடக்கி வைத்­தி­ருக்­கி­றார்.

ரிஸா­னாவின் குடி­சை­யி­லி­ருந்து 300 மீற்றர் தூரத்தில் உள்ள அவர்­­ளுக்குச் சொந்­­மான வளவில் வீட்­டுக்கு அத்­தி­வாரம் இடு­­தற்­கான வேலை­களில் இரா­ணுவ வீரர்கள் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்­ததை அவ­தா­னிக்க முடிந்­தது. வீடு கட்டத் தேவை­யாக கற்கள், மண் என்­­னவும் அங்கு கொட்­டப்­பட்­டி­ருக்­கின்­றன. கூடி­­வி­ரைவில் வீட்டை நிர்­மா­ணித்துத் தரு­­தாக அவர் உறு­தி­­ளித்­தி­ருக்­கிறார்.

இதற்­கி­டையில் ஜனா­தி­பதி ஒரு வீட்டை ஒதுக்­கி­யுள்­­தா­கவும் சவூதி தன­வந்தர் ஒருவர் வீடு கட்­டப்­போ­­தா­கவும் பல தக­வல்கள் வெளி­வந்­­வண்­­மி­ருக்­கின்­றன. இவற்றில் எவை நடந்­தேறப் போகின்­றன என்­பதைப் பொறுத்­தி­ருந்­துதான் பார்க்க வேண்டும்.

இது­வரை எந்­­வொரு குறிப்­பி­டத்­தக்க அர­சி­யல்­வா­தியும் ரிஸா­னாவின் குடி­சைக்கு விஜயம் செய்­­வில்லை. ஆறுதல் கூற­­­வில்லை. ஆனால் அறிக்­கை­களால் மட்டும் அர­சியல் நடத்திக் கொண்­டி­ருக்­கி­றார்கள். தயவு செய்து எமது பிள்­ளையின் பெயரால் அர­சியல் நடத்­தா­தீர்கள் என மன­மு­ருகிக் கேட்­கிறார் ரிஸா­னாவின் தாயாரின் சகோ­­­ரான லரீப்.

இதற்­கி­டையில் ரிஸா­னாவின் குடும்­பத்­திற்­காக கிடைக்­கப்­பெறும் உத­வி­களை ஒழுங்­கு­­டுத்­து­­தற்­கான வேலைத்­திட்டம் ஒன்றை ஆரம்­பிப்­பது பற்றி மூதூர் முக்­கி­யஸ்­தர்கள் கலந்­து­ரை­யாடிக் கொண்­டி­ருக்­கி­றார்கள். ரிஸா­னாவில் ஞாப­கார்த்­­மாக ஒரு அமைப்பை நிறுவி அதன் மூல­மாக ரிஸா­னாவின் குடும்­பத்தைப் பரா­­ரிப்­பது பற்றி ஆலோ­சிக்­கப்­பட்­டுள்­ளது என்­கிறார் ரிஸா­னா­வுக்கு கற்­பித்த ஆசி­ரி­யரும் அக் குடும்­பத்தின் நல­னுக்­காக கடந்த 7 வரு­டங்­­ளுக்கும் மேலாக இயங்கி வரு­­­ரு­மான ஜிஹாத் சேர்.

ரிஸானாவின் மரணச் செய்தி கேட்டு அந்தக் குடிசையை நோக்கி மக்கள் அலை அலையாகத் திரண்டு கொண்டிருக்கிறார்கள்.

திருகோணமலை மாவட்டத்திலிருந்து மட்டுமன்றி மட்டக்களப்பு, அம்பாறை, இரத்தினபுரி, கொழும்பு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் அங்கு வந்திருந்தார்கள். இனம், மதம், மொழி வேறுபாடுகளுக்கப்பால் அனைவரும் ரிஸானாவுக்காக மட்டுமே ஒன்றுகூடியிருந்ததை அவதானிக்க முடிந்தது. எல்லோரும் பேச வேண்டுமென்று நினைக்கிறார்கள். ஆனால் பேச முடியவில்லை. துக்கம் அவர்களது நெஞ்சை அடைத்திருந்ததால் கண்ணீரால் மட்டுமே அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.


இதற்கு மேல் அங்கு நின்று அழுவதற்கு என்னிடமும் கண்ணீர் இல்லை. நேரமும் இரவு 8 மணியாகியிருந்தது. ரிஸானாவின் குடிசையிலிருந்து விடைபெறுகிறேன்.
கடைசியாக ரிஸானாவின் உம்மாவிடம் ஒரு கேள்வி. " உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?
``
ம்.... ரிஸானா வேண்டும்``
கொடுக்க முடியுமா எங்களால்?
மூதூரிலிருந்து எம்.பி.எம்.பைறூஸ்
வீரகேசரி 15-01-13

No comments:

Post a Comment

Israel assassinate 18 IRGC members since December!

Israel strikes Iran consulate in Syria’s capital Damascus:  What we know Iran has promised a response after an alleged Israeli attack on its...