Wednesday 5 September 2012

சிவகாசி முதலிப்பட்டி கிராமத்தில் ஐம்பதுக்கு மேற்பட்ட உழைக்கும் மக்கள் இலாப வெறிக்குப் பலி!



 சிவகாசி அருகேயுள்ள முதலிப்பட்டி என்ற கிராமம், போக்குவரத்து உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லாத சாதாரண குக்கிராமம். இங்குதான் சுமார் 10 ஏக்கர் பரப்பளவிலான திறந்தவெளியில், அடுத்தடுத்து அமைந்துள்ள சின்னஞ்சிறிய 40 அறைகளுடன் செயல்பட்டு வந்தது ஓம்சக்தி பயர் ஒர்க்ஸ் தொழிற்சாலை.

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 56 பேர் உயிரிழப்பு

புதிய தலைமுறை தொலைக்காட்சி பதிவு செய்த நாள் - September 5, 2012  2:36 pm

சிவகாசி… பட்டாசுத் தொழிலுக்கு உலக அளவில் புகழ்பெற்ற நகரம் இது.

இதன் காரணமாகவே, குட்டி ஜப்பான் என்றும் வர்ணிக்கப்படுகிறது. இத்தனை பெருமைகள் கொண்ட சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலைகளில் அடிக்கடி ஏற்படும் தீ மற்றும் வெடி விபத்துக்கள் காரணமாக பெருமளவிலான உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

இது வாடிக்கையான ஒன்றுதான் என்றாலும், முதலிப்பட்டி என்ற இடத்தில் உள்ள ஓம் சக்தி பயர் ஒர்க்ஸ் தொழிற்சாலையில் இன்று நண்பகலில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து, 50க்கும் மேற்பட்ட உயிர்களை பலி கொண்டுள்ளது.

இந்த விபத்தில், பட்டாசுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த குடோன் வெடித்துச் சிதறியதில், ஒட்டுமொத்த தொழிற்சாலையும் இடிந்து தரை மட்டமானது. இதில், தொழிலாளர்கள் அனைவரும் பல அடி தூரத்துக்கு தூக்கி எறியப்பட்டு, உடல் சிதறி உயிரிழந்தனர். தகவலறிந்து அவர்களை காப்பாற்றச் சென்றவர்களும், வேடிக்கைப் பார்த்தவர்களில் பலரும் தீ யில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

பட்டாசு குடோன் வெடித்துச் சிதறிய சத்தம் ஒரு கிலோ மீட்டர் தொலைவை தாண்டி, எதிரொலித்தது. பல கிலோ தொலைவுக்கு புகை மண்டலம் தெரிந்ததால், விபத்து நிகழ்ந்த இடத்தில் ஏராளமான பொதுமக்கள் கூடினர். அப்போது, மீண்டும் பட்டாசுகள் வெடித்துச் சிதறியல் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பட்டாசுத் தொழில் மூலம் கோடிக் கணக்கில் பணம் கொழிக்கும் சிவகாசி நகரில் தீக்காயத்துக்கு சிகிச்சை அளிப்பதற்கு என சிறப்பு மருத்துவமனைகள் இல்லை. இந்த நகரை உள்ளிடக்கிய விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவமனையிலும் தீக்காய சிகிச்சைக்கு என சிறப்பு வார்டுகள் இல்லை. இதன் காரணமாக. இந்த விபத்தில் சிக்கிய அனைவரும் 70 கிலோ மீட்டர் தொலைவில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதன் காரணமாகவே உயிரிழப்புகள் அதிகரித்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

விபத்து நடந்தது எப்படி?

சிவகாசி அருகேயுள்ள முதலிப்பட்டி என்ற கிராமம், போக்குவரத்து உள்ளிட்ட எந்த  அடிப்படை வசதியும் இல்லாத சாதாரண குக்கிராமம். இங்குதான் சுமார் 10 ஏக்கர் பரப்பளவிலான திறந்தவெளியில், அடுத்தடுத்து அமைந்துள்ள சின்னஞ்சிறிய 40 அறைகளுடன் செயல்பட்டு வந்தது ஓம்சக்தி பயர் ஒர்க்ஸ் தொழிற்சாலை.

ஒரு அறையில், வெடிமருந்தை பட்டாசுக்குள் வைத்து அழுத்தும்போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், ஏராளமானோர் சிக்கிய நிலையில், பக்கத்து அறையில் இருந்தவர்கள், அவர்களை மீட்கும் ஈடுபட்டனர். ஆனால், அடுத்தடுத்த அறைகளுக்கும்  தீ பரவி விட்டதால், அனைவரும் நெருப்பு வளையத்துக்குள் சிக்கிக் கொண்டனர். சிறிது நேரத்தில், தொழிற்சாலையே வெடித்துச் சிதற, பெரும்பாலான தொழிலாளர்கள் திறந்தவெளி மைதானத்தில் பிணமாக சிதறினர்.

 மிகப் பெரிய உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய இந்த பட்டாசு ஆலையில், கடந்தவாரம்தான் வெடிபொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் ஆய்வு நடத்தி உள்ளனர். அப்போது ஆலையின் உரிமத்தை ரத்து செய்ய அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். ஆனால், இந்த ஆலையை குத்தகைக்கு எடுத்தவர், உரிமத்துக்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளார். அந்த உரிமத்திற்கான காலம் இன்றுடன்  முடியவிருந்த காரணத்தால், அவசர, அவசரமாக பட்டாசு தயாரிப்புப் பணிகள் நடைபெற்றுள்ளன. இதுவும் விபத்துக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த கோரவிபத்து குறித்து தகவல் அறிந்ததும் விருதுநகர், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும்  தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. எனினும், பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டே இருந்ததால், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தை நெருங்க முடியவில்லை.  பல மணி நேரப் போராட்டத்துக்கு பின்னரே, பிணமாக கிடந்தவர்களையும், காயமடைந்தவர்களையும்  மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும்  பட்டாசுகளில் 90 சதவீதம் சிவகாசியில்தான் தயாரிக்கப்படுகிறது. இந்த பெருமைகள் எல்லாம் ஒருபுறம் இருந்தாலும், பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்களின் அலட்சியத்தால், ஆண்டுதோறும் உயிரிழக்கும் தொழிலாளர்கள் பற்றிய புள்ளி விவரம், அதிர்ச்சியை இன்னும் அதிகரிப்பதாகவே இருக்கிறது.

வெடி விபத்து நிகழ்ந்த அந்த நிமிடங்கள்….

முதலிப்பட்டியிலுள்ள ஓம்சக்தி பட்டாசு தொழிற்சாலையில் சரியாக காலை 11.30 மணியளவில் ஏறத்தாழ 250 பேர் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

42 அறைகளை கொண்ட ஆலையின், ஒரு அறையில் வெடிகளை தனித் தனியாக தயாரித்த தொழிலாளர்கள், வெடி மருந்துகளை நிரப்பிக் கொண்டிருந்தனர். குறிப்பாக வெடிகளில் வெடி உப்பு, பொட்டாசியம் நைட்ரேட், சல்ஃபர், அம்மோனியம் பவுடர் மற்றும் கரித்துகளை தொழிலாளர்கள் நிரப்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது மருந்தை அழுத்தும் பணி நடைபெற்றது. ஒரு கட்டத்தில் அதிக அழுத்தம் காரணமாக வெடி விபத்து நிகழ்ந்தது. இதனால் அந்த அறை முழுவதும் வெடித்துச் சிதறியது. இதில் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் பலியாகினர்.

இதைத் தொடர்ந்து பட்டாசு ஆலையிலுள்ள மேலும் பல அறைகளுக்கும் தீ பரவி வெடி விபத்து ஏற்பட்டது.

மொத்தம் 4 வரிசைகளாக அறைகள் இருந்தன. ஒவ்வொரு அறைக்கு இடையேயும் 60 அடி இடைவெளி இருந்தது. விபத்தில் ஏராளமான அறைகள் வெடித்துச் சிதறின. மேலும் புகை மண்டலும் பல அடி உயரத்துக்கு எழும்பியது.

வெடி விபத்துச் சத்தம் முதலிப்பட்டியை தாண்டி பல பகுதிகளுக்கும் கேட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்

முதலமைச்சர் இரங்கல்

சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலை விபத்தில் பலியானவர்களுக்கு  முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்..

விபத்து குறித்து தனக்கு தகவல் கிடைத்ததும், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், முனுசாமி, வைத்திலிங்கம், ராஜேந்திர பாலாஜி, செல்லப்பாண்டியன் ஆகியோரை உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறும்படி அனுப்பி வைத்ததாக  முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

பட்டாசு தொழிற்சாலை விபத்தில் காயடைந்த  78 பேருக்கும் உரிய  சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதாக அவர்  தெரிவித்துள்ளார். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு  தலா இரண்டு லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டிருப்பதாக முதலமைச்சர் ஜெயலலிதா  வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Israel assassinate 18 IRGC members since December!

Israel strikes Iran consulate in Syria’s capital Damascus:  What we know Iran has promised a response after an alleged Israeli attack on its...