Tuesday 21 February 2012

பேரவை வளாகத்தில் பெரும் `தடல் புடல்`


ஜெனிவா மாநாடு ஆரம்ப நாளன்று ஏட்டிக்குப் போட்டியாக ஆர்ப்பாட்டம் (/நடத்த ஏற்பாடு)

இலங்கை விவகாரம் சர்வதேச அரங்கில் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள தற்போதைய பரபரப்பான சூழ்நிலையில், ஜெனிவா மாநாடு ஆரம்பமாகும் தினத்தன்று இலங்கைக்கு எதிராகவும், ஆதரவாகவும் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் ஏட்டிக்குப் போட்டியாக நடத்தப்படவுள்ளன.

இலங்கைக்கு எதிராகப் புலம்பெயர் தமிழர்களும், ஆதரவாக புலம் பெயர் சிங்களவர்களும் அலைபோல் திரண்டுவந்து ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர் என்று நம்பகரமாக அறியமுடிகின்றது.

ஜெனிவா மாநாடு ஆரம்பமாவதற்கு இன்னும் ஆறு நாள்களே எஞ்சியுள்ள நிலையில், இரு சாராரும் ஆர்ப்பாட்டங்களுக்கான ஏற்பாடுகளைத் தடல்புடலாகச் செய்துவருகின்றனர் எனத் தெரியவருகிறது.

மனித உரிமைகள் பேரவை அமைந்துள்ள வளாகத்தில் இருபுறங்களிலும் ஒரே தினத்தன்று இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவுள்ளமையால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை சுவிற்சர்லாந்து அரசு முன்னெடுத்து வருகின்றது என அந்த நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய நாடுகளில் வாழும்தமிழர்களுக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு தமிழ் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ள அதேவேளை, சிங்கள மக்களுக்கும் அவர்களின் ஏற்பாட்டாளர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர்.

உலகின் முக்கிய உறுப்பினர்கள் ஜெனிவா மாநாட்டில் கலந்துகொள்வதற்கு வரும் தறுவாயில், இலங்கை விவகாரம் தொடர்பில் ஏட்டிக்குப் போட்டியாக ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதானது இலங்கைக்கு ஏதோவொரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என இராஜதந்திரிகள் கூறுகின்றனர்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணையொன்றை நடத்தி, தமிழர்களுக்கு நீதியை வழங்குமாறு சர்வதேச சமூகம் இலங்கையை வலியுறுத்தவேண்டும் எனக் கோரியே புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர் எனத் தற்போதைக்குத் தெரியவருகிறது.

இது இவ்வாறிருக்க, இலங்கை விவகாரத்தில் சர்வதேசம் மூக்கை நுழைக்கக்கூடாது என்றும், இலங்கைக்கு உலக நாடுகள் ஒத்துழைப்பு நல்கவேண்டும் எனக் கோரியுமே புலம்பெயர் சிங்களவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.போர்க்குற்றச்சாட்டுப் படங்கள், இலங்கைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை புலம்பெயர் தமிழர்கள் தயாரித்து வருகின்றனர்.
 
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர்களுக்கு ஆதரவாக சில மாற்றினத்தவர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவுள்ள அதேவேளை, தமிழருக்கு நேர்ந்த அநீதிகளை எழுத்து வடிவில் வடிவமைத்து துண்டுப்பிரசுர விநியோகமும் இடம்பெறவுள்ளது.

யாழ் உதயன் 21 பெப்ரவரி 2012, செவ்வாய் 8:55 மு.ப

No comments:

Post a Comment

Israel assassinate 18 IRGC members since December!

Israel strikes Iran consulate in Syria’s capital Damascus:  What we know Iran has promised a response after an alleged Israeli attack on its...