Sunday 18 September 2011

குஜராத்தில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம் மக்களை நரபலி வேட்டையாடிய நரேந்திர மோடியின் ஏமாற்றுக்கு தாமரைச் செல்வி ஜெயலலிதா மலராதனை!

மாநில அரசியலுக்கு இந்துமதப் பயங்கரவாதம்,

கலவரம்!

தேசிய அரசியலுக்கு மத நல்லிணக்கவாதம்,

உண்ணாவிரதம்!!

``இந்துக்கள் முஸ்லீம்களுக்கு பாடம் படிப்பிக்கட்டும்``

குஜராத் கலவரத் தலைவர் நரேந்திர மோடி

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நடத்தி வரும் உண்ணாவிரதத்துக்கு அதிமுக முழு ஆதரவு தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை, செப்டம்பர் 17, 2011, 12:38

இது தொடர்பாக நரேந்திர மோடிக்கு முதல்வர் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளதோடு தனது கட்சியின் சார்பில் எம்பிக்கள் மைத்ரேயன், தம்பிதுரை ஆகியோரை உண்ணாவிரதத்துக்கு அனுப்பி வைத்தார்.

இன்று காலை உண்ணாவிரத மேடைக்குச் சென்ற தம்பிதுரை, ஜெயலலிதாவின் வாழ்த்துக் கடிதத்தை நரேந்திர மோடியிடம் அளித்தார். பின்னர் தம்பிதுரையும், மைத்ரேயனும் உண்ணாவிரத மேடையில் அமர்ந்தனர்.

பின்னர் உரையாற்றிய தம்பிதுரை, குஜராத்- தமிழ்நாடு இரு மாநிலங்களுக்கு இடையேயும் வர்த்தகத் தொடர்பு நெடுநாட்களாக இருந்து வருகிறது. தமிழகத்தில் 3ம் முறையாக புரட்சித் தலைவி ஜெயலலிதா முதல்வரானபோது, அந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியில் நரேந்திர மோடி நேரில் கலந்து கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார்.

அதனால் புரட்சித் தலைவி எங்களை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து வரச் சொல்லியிருந்தார். மோடிக்கு எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். மோடிக்கு பதில் மரியாதை செய்வதற்காகவே புரட்சித் தலைவி எங்களை இந்த உண்ணாவிரத நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு தமிழகத்தில் முன்னர் பதவியில் இருந்த திமுகவும், மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் தான் காரணம். இவர்கள் செய்த மிகப்பெரும் ஊழலால் உலகமே நம்மை ஏளனமாகப் பார்க்கிறது.

அமெரிக்கா கூட மோடியைப் பாராட்டுகிறது என்பது மாநிலத்தில் அவர் மேற்கொண்ட வளர்ச்சித் திட்டங்களும் அவரது நிர்வாகத் திறனுக்கும் கொடுக்கப்பட்ட மரியாதை. அவரின் முயற்சி வெற்றிபெற தமிழக முதல்வரின் வாழ்த்தைத் தெரிவிக்கிறோம் என்றார் தம்பிதுரை. பின்னர் மைத்ரேயனும் பேசினா்.
===================================

குஜராத்தில் மோடியின், முஸ்லிம் மக்களுக்கு எதிரான நரபலி வேட்டை


“இந்துக்கள் தங்கள் கோபத்தை முசுலீம்கள் மீது காட்டுவதை கண்டு கொள்ள வேண்டாம், அவர்கள் முசுலீம்களுக்கு பாடம் புகட்டட்டும்” என்று நரேந்திர மோடி கூறியதை குறிப்பிட்டிருக்கிறார்  சன்சீவ் பட்.

“நான் குல்பர்கா சமூகக் கூடம் எரிந்து தீர்ந்த அடுத்த தினம் அங்கே சென்றிருந்தேன். அதன் தரையெங்கும் மனிதச் சதை தீயில் பொசுங்கி கூழாகப் படிந்திருந்தது. அது எனது காலணியின் கீழ் பகுதியில் சவ்வு போல் ஒட்டிக் கொண்டு நின்றது. அந்தத் தரையின் ஒரு மூலையில் பாதி எரிந்தும் எரியாமலும் இருந்த ஒரு புத்தகத்தை நான் கண்டெடுத்தேன். அது ஒரு பிரிட்டானிக்கா என்சைக்ளோ பீடியா. அதன் மேல் படிந்திருந்த சாம்பலின் மிச்சங்களைத் தட்டிவிட்டு முதல் பக்கத்தைப் புரட்டினேன் – அஸன் ஜாஃப்ரி என்கிற பெயர் அழகான முத்து முத்தான கையெழுத்தில் எழுதப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. அன்றைக்கு நாண் அணிந்திருந்த காலணிகளை அதற்குப் பின் நான் பயன்படுத்தவும் இல்லை – அதன் அடிப்பகுதியை சுத்தம் செய்யவும் இல்லை”

குஜராத் கலவரங்களை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் முன் 2002-ம் ஆண்டு குஜராத் காவல்துறையின் உளவுப் பிரிவு கமிஷனராய் இருந்த சஞ்சீவ் ராஜேந்திர பட்டின் வாக்குமூலத்திலிருந்து வெளியே கசிந்துள்ள பகுதிகளில் மேலே உள்ள பகுதிகள் காணப்படுகிறது. இந்த அறிக்கையின் விவரங்களை தெகெல்கா பத்திரிகை கடந்த மாதம் வெளியிட்டிருந்தது.

பிப்ரவர் 27-ம் தேதி 2002-ம் ஆண்டு கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் முதலமைச்சர் கூட்டிய காவல் துறை உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்து கொண்டுள்ளார். அந்தக் கூட்டத்தில் வைத்து முசுலீம்களைப் பழிவாங்கும் நேரம் இதுவென்றும், இந்துக்கள் தமது ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ளப்போகிறார்கள் என்றும், அதைக் காவல் துறை கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றும் மோடி பகிரங்கமாக உத்திரவிட்டார்.

அடுத்த நாள். இந்துக்களின் பழிவாங்கும் உணர்ச்சி, அரசு இயந்திரத்தின் மௌனமான அங்கீகாரத்துடன் அரங்கேறுகிறது. முசுலீம்களைக் கண்ட இடத்திலெல்லாம் கொன்று குவித்தனர் இந்து பயங்கரவாதிகள். கருவிலிருந்த முசுலீம் குழந்தைகள் கூட அன்றைக்குத் தப்பவில்லை. தொடர்ந்து நடந்த வன்முறை வெறியாட்டத்தில் நூற்றுக்கணக்கான முசுலீம்கள் கொல்லப்பட்டனர், பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்டனர். காந்தி பிறந்த மண் என்று போற்றப்படும் மாநிலம் முசுலீம்களின் இரத்தத்தால் சிவந்தது.

கலவரத்தால் அச்சமடைந்த நூற்றுக்கணக்கான முசுலீம்கள் மெகானி நகரில் இருக்கும் குல்பர்கா சமூகக் கூடத்தில் தஞ்சமடைந்துள்ளனர். அது பிப்ரவரி 28-ம் தேதி. அன்று அங்கே தஞ்சமடைந்திருந்தவர்களில் ஒருவர்தான் காங்கிரஸின் முன்னாள் எம்.பி ஹஸன் ஜாஃப்ரி. அன்று அந்தக் கூடத்துக்கு வெளியே முசுலீம்களைக் கொன்று போட வேண்டுமென்று கூச்சலிட்டுக் கொண்டு ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, வி.எச்.பி போன்ற இந்து பயங்கரவாத இயக்கங்களின் தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்திருக்கிறார்கள். அந்தப் பகுதியின் கள நிலவரத்தை பார்வாட் எனும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சஞ்சீவ் பட்டுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்.

சஞ்சீவ் பட் தனது மேலதிகாரிகளைத் தொடர்பு கொண்டு நிகழவிருக்கும் இனப் படுகொலையை எப்படியாவது தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என்று கெஞ்சியிருக்கிறார். ஒருவரும் கண்டு கொள்ளாமல் போகவே முதலமைச்சர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு ஓ.பி. சிங் என்கிற அதிகாரியிடம் பேசுகிறார். ஆனால் அங்கே குல்பர்கா சமூகக் கூடம் அமைந்திருக்கும் மெகானி நகர் பகுதியிலோ கொஞ்சம் கொஞ்சமாகப் பிற பகுதிகளில் இருந்து திரட்டி வரப்பட்ட இந்து வெறியர்களின் கும்பல் பெரிதாகிக் கொண்டேயிருந்திருக்கிறது.

முந்தைய தினம் மோடியின் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகளின் உண்மையான பொருளை சஞ்சீவ் உணர்ந்து கொண்ட போது அங்கே குல்பர்கா சமூகக் கூட முற்றிலுமாக எரிந்து போயிருந்தது. 69 முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அஸன் ஜாஃப்ரியை வெளியே இழுத்து வந்த இந்து வெறியர்கள், அவரது கழுத்தில் நாய் பிடிக்கும் இரும்புச் சுருள் கண்ணியை மாட்டி இறுக்கி, தரதர வென்று இழுத்துள்ளனர். பின் இறந்த அவரின் உடலைத் துண்டுத் துண்டாகப் பிளந்து நெருப்பில் அடையாளம் தெரியாத அளவுக்கு எரித்துள்ளனர்.

இவையெல்லாம் ஏதோ ஆத்திரத்தில் செய்யப்பட்ட கொலைகள் அல்ல. சட்டென்று ஒரு கண நேர கோபத்தில் நிகழ்ந்த வன்முறைகள் அல்ல. அன்றைக்கு நிகழ்ந்த கொலைகளை எப்படியெப்படியெல்லாம் அனுபவித்துச் செய்தார்கள் என்பதையும், கற்பழிப்புகளை எப்படியெல்லாம் திட்டமிட்டு ஒரு கலையைப் போல் நிறைவேற்றினார்கள் என்பதையும், முசுலீம் குழந்தைகளைக் கொன்று களிப்புற்ற தங்கள் அனுபவத்தையும் பின்னர் அவர்களே தெகல்காவின் கேமரா முன் நிதானமாக அசை போட்டுச் சொன்னதைக் கேட்டு நாடே திகைத்து நின்றது. மனசாட்சி கொண்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
தீயிட்டுக் கொளுத்தப்பட்ட குல்பர்கா சமூகக் கூடதை ஆய்வு செய்யச் சென்ற போது எரிந்து போன நிலையில் கண்டெடுத்த அஸன் ஜாஃப்ரியின் என்சைக்ளோ பீடியாவைக் கையில் ஏந்தி நின்ற அந்த கணத்தின் மனப்பதிவுகளை சஞ்சீப் பட் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

“எனது கையில் பாதி எரிந்த போன நிலையிலிருந்த அந்தப் புத்தகத்தில் இருந்த ஹஸன் ஜாஃப்ரி எனும் அந்த அழகான கையெழுத்தை கொஞ்ச நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றேன். அந்த நேரத்தில் எனது பள்ளி நாட்களின் நினைவுகள் நிழலாடியது. அப்போதெல்லாம் இணையம் போன்ற வசதிகள் கிடையாது. என்சைக்ளோ பீடியாவைப் படிக்க வேண்டுமென்றால் சில கிலோ மீட்டர்கள் சைக்கிளை மிதித்து நூலகத்துக்குத் தான் செல்ல வேண்டும். எனது மாணவப் பருவத்தின் லட்சியமே ஒரு நல்ல என்சைக்ளோ பீடியாவை சொந்தமாக வாங்குவது தான். இதோ, எனது கையில் இப்போது ஒரு என்சைக்ளோ பீடியா இருக்கிறது – பாதி எரிந்து போன நிலையில் – தீயில் பொசுங்கிய மனித சதைக் கூழ் படிந்து போன நிலையில். நான் ஜாஃப்ரியை எனது வாழ்நாளில் சந்தித்ததேயில்லை. ஆனால், அந்த அழகான கையெழுத்து நிச்சயம் அந்த மனிதரின் பக்குவப்பட்ட கலாச்சாரத்தை எனக்கு உணர்த்தியது”

2002ம் ஆண்டு குஜராத்தில் இந்து வெறியர்கள் நிகழ்த்திக் காட்டிய அந்த படுகொலைச் சம்பவங்களில் கொல்லப்பட்ட முசுலீம்களில் எத்தனையோ அஸன் ஜாஃப்ரிக்களின் நெஞ்சை உலுக்கும் கதைகள் உள்ளது. படுகொலைச் சம்பவங்களின் பின்னுள்ள சதியை அம்பலப்படுத்தும் முயற்சியில் இறங்கிய தனது சொந்தக் கட்சிக்காரரான ஹிரேன் பான்ட்யாவைக் கூட பின்னர் கொன்று போட்டனர் இந்து பயங்கரவாதிகள். சென்ற வருடத்தின் ஜனவரி மாதம் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினரின் முன் கொடுக்கப்பட்ட இந்த வாக்குமூலங்களைக் கொண்டு நடப்பிலிருக்கும் சட்டங்களைக் கொண்டே மோடியைத் தண்டிக்க முடியும். தூக்கில் கூட போட்டிருக்க முடியும்.
ஆனால் இதுவரை அதைத் தன் சொந்த அரசியல் நலன்களுக்காகக் கூட முன்னெடுத்துச் செல்ல காங்கிரசு முயலவில்லை. கார்ப்பரேட் உலகத்தால் மோடிக்கு நல்லவர் வல்லவர் என்கிற ஞானஸ்நானம் வழங்கப்பட்டு அவரது பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டன. நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும் நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும் என்று முதலாளித்துவ ஊடகங்களும் ஒரு முடிவுக்கு வந்து விட்டன. மோடியின் பொருளாதார ‘சாதனைகளின்’ ஒளியில் தான் கருகிப் போன சில ஆயிரம் முசுலீம்களின் கனவுகளும் உள்ளன என்பதை இவர்கள் மிக வசதியாக மறந்து விடத் துடிக்கிறார்கள்.
குஜராத்தின் சாதனைகள் பற்றிய மயக்கத்தில் இருப்பவர்கள் இன்றும் தொழில்கள் பறிக்கப்பட்டு, வாழ்விடம் பறிக்கப்பட்டு, வாழ்க்கையே பறிக்கப்பட்டு, சொந்தங்களை இழந்து குஜராத்தில் அகதிகளாய் அலையும் அந்த அப்பாவி முசுலீம்களிடம் சென்று அதைப் பற்றி பேசட்டும். ஆனால், ஜனநாயகத்திலும், சக மனிதனின் வாழும் உரிமையின் பேரிலும் உண்மையான அக்கறை கொண்டவர்கள் சிந்தித்துப் பார்க்க எம்மிடம் ஒரு கேள்வி உண்டு – “இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த அமைதி?”
(தற்போது இந்த நேர்மையான தைரியமான காவல் அதிகாரி உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்திருக்கிறார். அதில் மோடி நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டதையும், மோடி அங்கே கலவரத்திற்கு ஆதரவாக தெரிவித்த்தையும் கூறியிருப்பதோடு, இது குறித்து சிறப்பு புலனாய்வு குழு தீவிரமாக விசாரிக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால் சஞ்செய் பட்டின் இந்த நேரடி வாக்குமூலத்தை மறுத்து மோடியின் பக்தர்களான சில போலீசு அதிகாரிகள் பேசிவருகின்றனர். கோத்ரா எரிப்பு நடந்த இரவில் கூடிய அந்த கூட்டத்தில் இந்த சஞ்செய் பட் இல்லவே இல்லை என்று சக்ரவர்த்தி எனும் அன்றைய டி.ஜி.பி கூறியிருக்கிறார்.
வேறு இரு போலீசு அதிகாரிகள் மோடி கூட்டிய அந்த கூட்டத்தில் யாரெல்லாம் இருந்தார்கள் என்று நினைவில்லை என்று சமாளித்திருக்கிறார்கள். ஆனால் இந்த பச்சைப் பொய்யை சஞ்செய் பட்டின் ஓட்டுநராக இருந்த தாரா சந்த் யாதவ் மறுத்திருக்கிறார். அன்றைய கூட்டத்திற்கு சஞ்செய் கலந்து கொண்டதையும், அவருக்காக வாகனத்துடன் வெளியில் காத்துக் கொண்டிருந்ததையும் அந்த ஓட்டுநர் துணிச்சலுடன் தெரிவித்திருக்கிறார். இதற்காக மோடி கும்பல் இவரை என்கவுண்டர் செய்தாலும் செய்யலாம்.
ஏனெனில் எந்த கொலைக்கும், பயங்கரவாத செயல்களுக்கும் இவர்கள் துணிந்தவர்கள்தான் என்பதை பிரக்யா சிங், அசீமானந்தா, மோடி மூலம் அறியலாம்.
நூற்றுக்கணக்கான முசுலீம் மக்களை கொன்று குவித்த அந்த கலவரம் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட படுகொலை என்பதும், அதற்கு தலைமையேற்றவர்தான் நரேந்திர மோடி என்பதற்கும் இதை விட என்ன ஆதாரம் வேண்டும்?
கசாப்பை தூக்கில் போடவேண்டும் என்று தும்மினாலும், சிந்தினாலும் கூப்பாடு போடுபவர்களின் கோரிக்கையை நாம் மறுக்கவில்லை. ஆனால் கசாப் கொன்றதை விட அதிக எண்ணிக்கையில் கொன்றவரும், கசாபின் காலத்திற்கும் முந்தையவருமான நரவேட்டை நாயகன் மோடியைத் தூக்கில் போடவேண்டும் அல்லவா? எப்போது போடுவீர்கள்?

தகவல்: வினவு, April 26, 2011

No comments:

Post a Comment

Israel assassinate 18 IRGC members since December!

Israel strikes Iran consulate in Syria’s capital Damascus:  What we know Iran has promised a response after an alleged Israeli attack on its...