Monday 29 August 2011

முத்தமிழர் தூக்கு தண்டனையை நிறுத்த முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லை- சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு

'' தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் எனக்கு இருப்பது போலவும், அந்த அதிகாரத்தை நான் பயன்படுத்தி அவர்களை காப்பாற்ற முடியும் என்பது போலவும் பேசப்படுவது சட்டத்தின்படி சரியானது அல்ல. பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் சட்டங்களைத் தெரிந்து கொண்டு வேண்டுமென்றே இவ்வாறு எனக்கு அதிகாரம் இருப்பது போல சொல்லி வருகிறார்களா? அல்லது சட்டங்களைப் பற்றி எதுவுமே தெரியாமல் முதல்- அமைச்சருக்கு இத்தகைய அதிகாரம் இருப்பதாக கூறுகிறார்களா? என்பது தெரியவில்லை.



எனவே சட்ட நிலைமை என்ன என்பதை இந்த மாமன்றத்தின் வாயிலாக பொது மக்களுக்கு தெரிவிப்பது எனது கடமை ஆகும் எனக் கருதுகிறேன். உச்ச நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஆளுநரோ அல்லது குடியரசுத் தலைவரோதான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி மன்னிப்பு அளிக்க முடியும்.''

தமிழக முதலமைச்சர் மாண்பு மிகு செல்வி ஜெயலலிதா.

=============================================================
இது உண்மையெனில் இது நாள் வரையும் இனமானத் தமிழ் சமரசவாதிகளான நெடுமாறனும், வைகோவும், செந்தமிழன் சீமானும் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றும், முதலமைச்சருக்கு முறையிடுவோம் என்றும் காலங்கடத்தியதற்கு காரணம் என்ன?

மக்கள் எழுச்சியை திசைதிருப்பி மழுங்கச்செய்வது தவிர வேறு எதுவும் இல்லை.இவர்களின் வர்க்க சுபாபமும்,வரலாற்றுப் பாத்திரமும் இது தான்.

இதையும் மீறி தமிழக மக்கள் எழுச்சி கொள்கின்றனர்.கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் அரச திணைக்களங்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

இதனிடையே திட்டமிட்டுத் தூண்டப்பட்ட தீக்குளிப்புகளை நடத்தினால், `அமைதிக்குப் பங்கம்`. `சட்டம் ஒழுங்கு மீறல்` எனக்காரணம் காட்டி ஒட்டுமொத்த மக்கள் எழுச்சியையுமே நசுக்குவது ஜெயா அரசுக்கு வசதியானதாக இருக்கும்.

இதற்காகத் திட்டமிட்டுத் தூண்டப்பட்ட தற்கொலைதான், ஈழ ஆதரவு முன்னணிப் போராளி செங்கொடியின் தீக்குளிப்பு.

தமிழகத்தின் தீவிரமான ஈழ ஆதரவுப் போராளிகளை, தீக்குளிக்க வைத்தே கொன்றொழிப்பது எனத் திட்டமிட்டிருக்கின்றது இந்தக்கும்பல்.

மடிச்சூடு தவிர வேறெந்த உஸ்ணத்தையும் உணர்ந்திராத இந்த உன்மத்தர்களுக்கு கட்சித் தொண்டன் தீயில் கருகுவது ``தீக்குளிப்பு``.
(ஏதோ குளியலறையில் ஒவ்வொரு நாள் விடிகாலையும் விறகு மூட்டி குளிப்பவர்கள் போல!!) இந்தச் சிறுமதியை மூடிமறைக்க சிலப்பதிகாரச் சான்று வேறு!

இனங்காணுங்கள் இக்கொடியவரின் கோரமுகத்தை!

================  புதிய ஈழப்புரட்சியாளர்கள் =========================

சட்டசபையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கையை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

1991 ஆம் ஆண்டு, மே மாதம் 21 ஆம் நாள், முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தபோது படுகொலை செய்யப்பட்டார் என்பதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவீர்கள். இது தொடர்பான வழக்கு பூந்தமல்லி தடா நீதி மன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

அதனை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் உச்சநீதிமன்றம் வரை சென்று மேல்முறையீடு செய்ததில், உச்ச நீதிமன்றம் நளினி, ஸ்ரீஹரன் என்கிற முருகன், சுதேந்திரராஜா என்கிற சாந்தன், பேரறிவாளன் என்கிற அறிவு, ஆகிய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

மேலும் 3 பேருக்கு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. எஞ்சிய 19 பேரை விடுதலை செய்தது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 நபர்களும் மறு ஆய்வு மனுதாக்கல் செய்தனர். இதனை 8.10.1999 அன்று உச்சநீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது. 17.10.1999 அன்று மேற்கண்ட தூக்கு தண்டனை கைதிகள் தமிழக ஆளுநருக்கு கருணை மனுக்களை சமர்ப்பித்தார்கள். 27.10.1999 அன்று தமிழக ஆளுநர் இவர்களின் கருணை மனுக்களை நிராகரித்து ஆணையிட்டார்.

தூக்கு தண்டனை கைதிகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் இது தொடர்பாக வழக்குகள் தொடுத்தனர். இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 25.11.1999 அன்று வழங்கிய தீர்ப்பில், மனுதாரர்கள் தொடுத்த வழக்குகளை ஏற்று கருணை மனுக்களை நிராகரித்த ஆளுநரின் ஆணையை தள்ளுபடி செய்து, அமைச்சரவையின் ஆலோசனையைப் பெற்று புதிய ஆணை வழங்குமாறு அறிவுறுத்தியது.

இந்தப் பொருள் குறித்து 19.4.2000 அன்று அன்றைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவு எடுக்கப்பட்டது:-

தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நான்கு கைதிகளில் ஒருவரான நளினியின் பெண் குழந்தை அனாதை ஆகிவிடும் என்று முதல்- அமைச்சர் தெரிவித்த கருத்திற்கிணங்க, நளினி ஒருவருக்கு மட்டும் கருணை காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்றும், மற்றவர்களைப் பொறுத்த வரையில் அவர்களது கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றும் ஆளுநருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை முடிவெடுத்தது.

கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையின் முடிவினை ஏற்று ஆளுநர் 21.4.2000 அன்று ஒப்புதல் அளித்தார். அதன்படி தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 நபர்களில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. இந்த மூன்று நபர்களும் குடியரசுத் தலைவருக்கு அளித்த கருணை மனுக்களை தமிழ்நாடு அரசு 28.4.2000 நாளிட்ட கடிதத்தின்படி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.

இதன் மீது மத்திய அரசின் உள்துறை, தனது 12.8.2011 நாளிட்ட கடிதத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் இந்த கருணை மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்து, இதனை மேற்கண்ட கைதிகளுக்கு தெரியப்படுத்துமாறு தெரிவித்து உள்ளது. இந்தக் கடிதத்தின் விவரம் சம்பந்தப்பட்ட கைதிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் தூக்கு தண்டனை விதிக்கப்பெற்ற மேற்படி பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று எனக்கு கோரிக்கைகள் விடுத்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

மேலும் பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள், எனக்கு எழுதியுள்ள கடிதத்தில் தனது மகனை விடுவிக்குமாறு வேண்டி உள்ளார். தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று நபர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய என்னிடம் கோருவதாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றி உள்ளதாக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா கடிதம் எழுதி உள்ளார்.

மேலும் சிலர் இது பற்றி கடிதங்கள் எழுதி உள்ளனர். இதில் எல்லோரும் கவனிக்க வேண்டிய உண்மை என்னவென்றால், பேரறிவாளன் உள்ளிட்ட மூவரை மரண தண்டனையிலிருந்து தமிழக முதல்- அமைச்சராகிய நான் காப்பாற்ற வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

ஆனால் 2000-ம் ஆண்டில் முதல்- அமைச்சராக இருந்த இதே கருணாநிதிதான் தனது தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் கருணை மனுக்களையும் நிராகரிக்கலாம் என்றும், மூவருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்யலாம் என்றும் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளார்.

அன்றைய முதல்- அமைச்சர் கருணாநிதியின் இந்தப் பரிந்துரையை அன்றைய ஆளுநரும் ஏற்றுக்கொண்டார். இவ்வாறு பேரறிவாளன் உள்ளிட்ட மூவருக்கும் அளிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்து விட்டு, செய்வதையெல்லாம் செய்துவிட்டு, இன்று ஒன்றும் தெரியாதது போல், அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று கருணாநிதி அறிக்கை வெளியிடுகிறார் என்றால், இது இரட்டை வேடம் அல்லாமல், பித்தலாட்டம் அல்லாமல், கபட நாடகம் அல்லாமல், வேறு என்ன என்பதை தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் எனக்கு இருப்பது போலவும், அந்த அதிகாரத்தை நான் பயன்படுத்தி அவர்களை காப்பாற்ற முடியும் என்பது போலவும் பேசப்படுவது சட்டத்தின்படி சரியானது அல்ல. பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் சட்டங்களைத் தெரிந்து கொண்டு வேண்டுமென்றே இவ்வாறு எனக்கு அதிகாரம் இருப்பது போல சொல்லி வருகிறார்களா? அல்லது சட்டங்களைப் பற்றி எதுவுமே தெரியாமல் முதல்- அமைச்சருக்கு இத்தகைய அதிகாரம் இருப்பதாக கூறுகிறார்களா? என்பது தெரியவில்லை.

எனவே சட்ட நிலைமை என்ன என்பதை இந்த மாமன்றத்தின் வாயிலாக பொது மக்களுக்கு தெரிவிப்பது எனது கடமை ஆகும் எனக் கருதுகிறேன். உச்ச நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப் பட்டவர்களுக்கு ஆளுநரோ அல்லது குடியரசுத் தலைவரோதான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி மன்னிப்பு அளிக்க முடியும்.


இவர்களுக்கு ஆளுநர் மன்னிப்பு அளிக்க வேண்டும் எனக் கருதப்பட்டிருந்தால் 2000-ஆம் ஆண்டு அன்றைய முதல்- அமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில்தான் அதற்கான முடிவு எடுத்திருக்க முடியும்; எடுத்திருக்க வேண்டும். அமைச்சரவையின் அறிவுரைப்படி ஆளுநரால் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, பின்னர் குடியரசுத் தலைவராலும் மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ள இந்த நிலையில், தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கோ, நிறுத்தி வைப்பதற்கோ எந்தவித அதிகாரமும் தமிழக முதல்- அமைச்சராகிய எனக்கு இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குடியரசுத் தலைவரால் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதே பொருள் தொடர்பான கருணை மனுவை மாநில ஆளுநர் பரிசீலிக்க வேண்டும் என மாநில அரசு கோர முடியாது என 1991 ஆம் ஆண்டே மத்திய அரசு தெளிவுரை வழங்கி உள்ளது. 5.3.1991 நாளிட்ட கடிதத்தில் மத்திய உள்துறை அமைச்சரகம் பின் வருமாறு தெரிவித்துள்ளது:-


இப்பொருள் தொடர்பாக அரசமைப்புச் சட்டத்தின் பொருத்தமான தன்மைகளைக் கருத்தில் கொண்டு பரிசீலித்த மத்திய அரசு, மரண தண்டனை குறித்த நிகழ்வுகளில் அதன் தொடர்பான கருணை மனு இந்திய அரசமைப்புச் சட்டம் 72-ன் கீழ் குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரத்தின்படி குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டிருந்தால், அது தொடர்பாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகூறு 161-ன்படி உள்ள அதிகாரத்தை பயன்படுத்த மாநில அரசிற்கு அதிகாரம் இல்லை என்று அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு கூறு 257 (1)-ன்படி கட்டளையிடுகிறது. இருப்பினும் சூழ்நிலைகள் மாறுபட்டிருந்தாலோ அல்லது புதியதாக ஏதாவது ஆதாரம் இருந்தாலோ, மரண தண்டனை பெற்ற நபரோ அல்லது அவர் சார்பாக வேறு ஒருவரோ, குடியரசுத் தலைவரின் முந்தைய உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு புதியதாக ஒரு மனுவினை குடியரசுத் தலைவருக்கு சமர்ப்பிக்கலாம்.

குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின்னர், அது தொடர்பாக பின்னர் தாக்கல் செய்யப்படும் அனைத்து மனுக்களும் குடியரசுத் தலைவருக்குதான் சமர்ப்பிக்கப்பட வேண்டும்; இது குறித்து நடவடிக்கையை குடியரசுத் தலைவர்தான் எடுப்பார். எனவே பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று நபர்களின் கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட நிலையில், இதனை மாற்றுவதற்கு எந்த வித அதிகாரமும் மாநில முதல்-அமைச்சர் என்ற முறையில் எனக்கு இல்லை என்பதை வலியுறுத்தி தெரிவிக்க விரும்புகிறேன்.

இந்த நிலையில் எனக்கு இதற்கான அதிகாரம் இருக்கிறது என்ற பிரச்சாரத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் எவரும் மேற்கொள்ள வேண்டாம் என்று இந்தப் பேரவையின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன். குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், இந்த மூவரின் உயிரைக் காப்பாற்ற தற்கொலை செய்து கொள்வதாக ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு, மக்கள் மன்றம் என்ற அமைப்பைச் சேர்ந்த செங்கொடி என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

உணர்ச்சி வயப்பட்டு, இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் நான் கேட்டுக் கொண்டு அமைகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Israel assassinate 18 IRGC members since December!

Israel strikes Iran consulate in Syria’s capital Damascus:  What we know Iran has promised a response after an alleged Israeli attack on its...