Tuesday 9 February 2010

சரத் பொன்சேகா கைது: அமெரிக்கா கவலை; மன்னிப்புச் சபை அதிர்ச்சி; பான்-கீ-மூன் ஆலோசனை

ரொயேட்டஸ் காணொளியைக்காண உருவப்படத்தில் இரட்டை அழுத்தம் செய்க.
சரத் பொன்சேகா கைது: அமெரிக்கா கவலை; மன்னிப்புச் சபை அதிர்ச்சி; பான்-கீ-மூன் ஆலோசனை
[ புதினப்பலகை ]
சிறிலங்காவில் அதிபர் தோர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டது குறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் பிலிப் கிரௌலி கருத்து வெளியிடுகையில் -
“சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை அமெரிக்கா தொடர்சியாக அவதானித்து வருகிறது. சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளது கவலையளிக்கிறது. சிறிலங்காவின் சட்டங்களுக்கு அமைவாகவே அவர் மீதான எந்தவொரு நடவடிக்கையும் அமைய வேண்டும்.
இதனால் சமூகத்துக்குள் ஏற்படக் கூடிய பிளவுகளைச் சமாளிக்கின்ற பேராற்றல் சிறிலங்கா அரசுக்குத் தேவை. எந்த நடவடிக்கை எடுக்கும் போதும் மிகக் கவனத்துடன் நடக்கா விட்டால், அது சமூகத்துக்குள் காயங்களையும், பிளவுகளையும் ஏற்படுத்தும்" என்று அவர் கூறியுள்ளார்.
“குடியரசு அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இப்படியான ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது அசாதாரணமானது” என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் - சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சிறிலங்காவின் அரசியல்கட்சிகள் மற்றும் அவற்றின் ஆதரவாளர்கள் வன்முறைகளில் இறங்காமல் கட்டுப்பாட்டுடன் அமைதியாக இருக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா. பொதுச் செயலளர் பான் கீ மூனின் பேச்சாளரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தேரதல் சட்டங்கள் தனியே தேர்தல் காலத்துக்கு மட்டுமே உரியவையல்ல. அதற்குப் பின்னரும் கடைப்பிடிக்கப்பட வேண்டியவை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதற்கிடையே - சர்வதேச மன்னிப்புச் சபை, “இது தேர்தலுக்குப் பிந்திய அடக்குமறை” என்று கூறியிருக்கிறது.
தேர்தலுக்குப் பிறகு எதிரணியைச் சிதைவடையச் செய்வதற்கான நடவடிக்கைகளை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்வதாக சர்வதேச மன்னிப்பு சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சாம் சரீபி தெரிவித்துள்ளார்.
“விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு, தேர்தலிலும் வெற்றியைப் பெற்ற பிறகு மகிந்த ராஜபக்ச மனித உரிமைகளைச் சிறப்பாகப் பேணுகின்ற நிலைக்கு நாட்டை வழிநடத்த வேண்டும்.
ஆனால் மாற்றுக் கருத்துகளைச் சகித்துக்கொள்ளும் தன்மை அங்கு மிகமிகக் குறைந்து போயிருப்பதைக் காணமுடிகிறது.
சிறிலங்காவுக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சர்வதேச ரீதியில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
கைது செய்யப்படுவதற்கு முன்னர் சரத் பொன்சேகா சிறிலங்கா மீதான போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பதாகத் தனக்குத் தெரிந்த உண்மைகளை வெளியிடத் தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உல்லாச புரியாகும் மைய மலையகமும், Spain இல் உல்லாசத் துறை எதிர்ப்பும்.

Thousands protest in Spain's Canary Islands over mass tourism By  Borja Suarez    April 21, 2024   SANTA CRUZ DE TENERIFE, Spain, April ...