Thursday 21 January 2010

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்: அரசு தேய்ந்து வணிக நிறுவனமான கதை

நாடுகடந்த அரசமைக்கும் குழுவுக்கு ஒரு திறந்தமடல்!
சேரமான்
அம்மையீர், ஐயன்மீர், வணக்கம்!
தைத்திருநாளில் நீங்கள் வெளியிட்ட அறிக்கை கண்டோம்.
இழந்துபோன எமது தேசத்தின் நிலங்களையும், இறையாண்மையையும் இராசரீக வழிகளில் வென்றெடுத்து தமிழீழத் தனியரசை நிறுவுவோம் என்று நீங்கள் அன்று சபதமெடுத்த பொழுது நாம் புளகாங்கிதமடைந்தோம்.
முள்ளிவாய்க்கால் அவலத்தால் வெதும்பிப்போயிருந்த எங்களுக்கு உங்களின் வாக்கு வேதவாக்காக ஒத்தடமளித்தது உண்மைதான். தமிழீழ மக்களவையும், நாடுகடந்த தமிழீழ அரசும் எதிரியைத் தாக்கும் இருபேராயுதங்கள் என்று நீங்கள் உரைத்தபொழுது நாம் மெய்மறந்தே போனோம்.
இக்கால பூகோள - அரசியல் தமிழீழத் தனியரசு நிறுவப்படுவதற்கான புறச்சூழலை தோற்றுவித்திருப்பதாக அன்று நீங்கள் பிரகடனம்செய்த பொழுது நாங்கள் உச்சிகுளிர்ந்ததும் உண்மைதான்.
ஆனால் இன்று...
நாடு கடந்த தமிழீழ அரசு ஒரு பல்தேசிய வணிக நிறுவனம் போன்று இயங்கும் என்கின்றீர்கள். தேசம்கடந்து இயங்கும் அரசுசாரா அமைப்புப் போன்று அது செயற்படும் என்கின்றீர்கள்.
போதாக்குறைக்கு உங்கள் கற்பிதத்திற்கு உவமையாக CNN, Microsoft போன்ற முதலாளிய நிறுவனங்களையும் துணைக்கு அழைக்கின்றீர்கள்!
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை அறிந்துள்ளோம். ஆனால் அரசு தேய்ந்து வணிக நிறுவனமாக மாறப்போகும் கதையின் சூத்திரத்தை மட்டும் எம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.
தயைகூர்ந்து விளக்குவீராக!
-------
உருவாகப் போகும் நாடுகடந்த தமிழீழ அரசு ஒரு அஞ்ஞாதவாச அரசு அல்ல என்கின்றீர்கள். அங்கீகரிக்கப்பட்ட சிறீலங்கா அரசுக்கு விரோதமாக இயங்கும் ஒரு அஞ்ஞாதவாச அரசுடன் உலகம் தொடர்புகளைப் பேணவிரும்பவில்லை என்றும் கூறுகின்றீர்கள். அதனால்தான் அஞ்ஞாதவாச அரசுடன் நாடுகடந்த அரசை ஒப்பிடுவது தவறு என்கின்றீர்கள்.
சரி, அப்படியே இருக்கட்டும். சிறீலங்கா அரசுடன் முரண்பட விருப்பமில்லை என்றால் நாடுகடந்த சிறீலங்கா அரசு என்று நீங்கள் பெயர்சூட்டிக் கொள்ளலாமே? பிறகெதற்கு தமிழீழம்?

நாடுகடந்த தமிழீழ அரசுக்கு அங்கீகாரம் பெறுவதற்காக உலக நாடுகளுடன் பேசுவதாக நீங்கள் அன்றுகூறிய பொழுது மயிர்க்கூச்செறிந்தது. உங்களது முயற்சியை உலக இராசதந்திரிகள் வரவேற்பதாக நீங்கள் பிரகடனம் செய்த பொழுது எங்களது மயிர்க்காம்பெல்லாம் புல்லரித்துப் போனது.

ஆனால் ஆறு மாதங்களுக்குள் அந்தர்பல்டி அடித்து இப்பொழுது புதுக்கதை கூறுகின்றீர்கள். வெளிநாட்டு அரசாங்க அதிகாரிகளுடனும், கொள்கை வகுப்பாளர்களுடனும், புத்திஜீவிகளுடனும் மட்டும் பேசிக்கொண்டிருப்பதாக அறிக்கை விடுகின்றீர்கள். அரசியல் - இராசதந்திர வழிகளில் பரப்புரை செய்வோம் என்று அறிவிக்கின்றீர்கள்.
எப்பொழுதும் அகிம்சை வழியில் உங்களது செயற்பாடு அமையும் என்று உறுதிபூணுகின்றீர்கள். ஆயுதப் பலம் தீண்டத்தகாதது என்று அருவருக்கின்றீர்கள். ஒவ்வொரு நாடுகளின் சட்டங்களுக்கும் கட்டுப்பட்டு இயங்கப் போவதாக சத்தியம் செய்கின்றீர்கள்.

அருமை! அருமையிலும் அருமை. இருந்தாலும் ஒரு சில சந்தேகங்கள் எழத்தான் செய்கின்றன. ஆறு மாதங்களாக வெளிநாட்டு அதிகாரிகளுடனும், கொள்கை வகுப்பாளர்களுடனும், புத்திஜீவிகளுடனும் பேசிக்கொண்டிருக்கும் நீங்கள் எதற்காக வெளிநாட்டு அரசியல் தலைவர்களை இன்னும் அணுகவில்லை? அதற்கான இராசதந்திரக் கதவுகள் இன்னமும்
திறக்கவில்லையா? அல்லது உங்களால் அவற்றைத் திறக்க முடியவில்லையா? இராசதந்திரம் என்பது பலத்தில் தங்கியிருப்பது.
பரப்புரை என்பது இராசதந்திரத்திற்கு உறுதுணை நிற்பதே தவிர அதுவே இராசதந்திரமாகிவிடாது. யதார்த்தம் அடிப்படியிருக்கும் பொழுது அகிம்சை வழியில் என்னதான் இராசதந்திரம் செய்யப் போகின்றீர்கள்? காந்தியடிகளின் உப்புச்சத்தியாக்கிரகமா?

வெஸ்ட்மின்ஸ்டர் திடலிலும், ஜெனீவா முன்றலிலும், பாரிசிலும் வெள்ளைக்காரனிடம் அடிவாங்கியதை நாமென்ன மறந்துவிட்டோமா? நீங்கள் மறந்திருக்கலாம்... ஏனென்றால் அடி எங்கள் மீதல்லவா விழுந்தது!

அகிம்சை வழியில் நீங்கள் செயற்படுவது நல்லதுதான். நீங்கள் வாழும் நாடுகளின் சட்டங்களை மதித்து வாழ்வதும் போற்றத்தக்கதுதான். ஆனால்... ஆயுதபலத்தை நீங்கள் அருவருக்கின்றீர்களோ இல்லையோ எங்கள் தேசியத் தலைவன் ஒருபொழுதும் போரை விரும்பியதில்லை என்பது மட்டும் உண்மை. அது உங்களுக்கும் தெரியும். உங்களுக்கு பின்னால் நிற்போருக்கும் தெரியும். அனாதையாக அந்தரித்து நின்ற எமது மக்களுக்காக எம் தலைவன் ஆயுதமேந்தியதை நீங்கள் இப்பொழுது சிறுமைப்படுத்திப் பேசுவதுதான் நகைப்புக்கிடமானது.

இவைதான் போகட்டும். உலக அங்கீகாரத்தை நாடுகடந்த தமிழீழ அரசு பெறுவது சாத்தியமில்லை என்கின்றீர்கள். அப்படியென்றால் எதற்காக நாடு கடந்த அரசு அமைக்க வேண்டும்? தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை ஆகியவற்றின் அடிப்படையில் அரசியல் தீர்வைப் பெறுவதற்காக நாடுகடந்த தமிழீழ அரசு உழைக்கும் என்கின்றீர்கள்.

தமிழீழம் கிடைத்தால்... என்றும் இழுக்கின்றீர்கள். அப்படியென்றால் தமிழீழம் அமைப்பது உங்களின் நோக்கமே இல்லையா? அல்லது தமிழீழம் அமையும் என்பதில் உங்களுக்கு நம்பிக்கையே இல்லையா?
இறுதியாக ஒரு கேள்வி.
எமது உடன்பிறப்புக்களான இஸ்லாமியத் தமிழர்களை தேசிய இனம் என்கின்றீர்கள். தமிழீழத்தில் முஸ்லிம்களுக்கான பிராந்தியங்கள் இருப்பதாகக் கூறுகின்றீர்கள். தமிழர்களைப் போன்று முஸ்லிம்களும் பிரிந்து சென்று தனியரசு அமைக்கும் உரிமையுடையவர்கள் என்கின்றீர்கள்.

தமிழீழம் அமைந்தால்... அவர்கள் விரும்பினால் தமிழீழத்தில் இருந்து பிரிந்து சென்று தனியரசு அமைக்கலாம் என்கின்றீர்கள். தமிழீழத்தில் இருந்து பிரிந்துசென்று தனியரசு அமைக்கப் போவதாக எப்பொழுது எமது இஸ்லாமிய உடன்பிறப்புக்கள் உங்களுக்கு அறிவித்தார்கள்?
இந்துக்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் என்று மூன்று மதங்களைச் சேர்ந்த தமிழர்களைக் கொண்ட தேசம் தமிழீழ தேசம். அதை இருகூறாக்கி இந்துக்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் ஒருதேசம், முஸ்லிம்களுக்கு ஒரு தேசம் என்று துண்டாடும் உரிமையை உங்களுக்கு யார் அளித்தார்கள்?

அதுசரி, ஆங்கிலத்தில் நீங்கள் வெளியிட்ட அறிக்கைக்கும், தமிழில் வெளியிட்ட மொழிபெயர்ப்புக்கும் இடையில் பாரிய கருத்துக் குழப்பங்கள் காணப்படுகின்றதே? உலகை திருப்திப்படுத்த ஆங்கிலத்தில் ஒரு அறிக்கை. எங்களை உசுப்பேத்த தமிழில் உணர்ச்சிவயமான இன்னொரு அறிக்கையா? அப்படியென்றால் பாம்புக்கு வால் மீனுக்குத் தலையா?
- சேரமான்
நன்றி:பதிவு- சங்கதி

No comments:

Post a Comment

Xi meets Sri Lankan PM

This handout photograph released by Sri Lanka Prime Minister’s Office on March 27, 2024 shows Sri Lanka’s Prime Minister Dinesh Gunawardena ...