Wednesday 6 January 2010

ஆட்சி மாற்றத்துக்கு பொன்சேகாவை ஆதரிக்க கூட்டமைப்பு முடிவு

ஆட்சி மாற்றத்துக்கு மக்களைக் கோர கூட்டமைப்பு நேற்று ஏகமனதாக முடிவு
அதற்காக பொன்சேகாவை ஆதரிக்கவும் தீர்மானம்
யாழ் உதயன் 2010-01-06 07:11:25

தமது ஆட்சியை நீடிப்பதற்கு மீண்டும் ஆணை தருமாறு தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று தீர்மானித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதற்காக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக இந்தத் தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும்படி தமிழ் மக்களைக் கோருவது
என்று நேற்று ஏகமனதாக முடிவு செய்தது. தமிழ்க் கூட்டமைப்பு இன்று காலை பத்திரிகையாளர் மாநாடு ஒன்றை நடத்தி அங்கு ஓர் அறிக்கையை வெளியிட்டுத் தனது முடிவை அறிவிக்கும் எனவும் தெரியவந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு நேற்றுப் பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள குழுக்களின் அறையில் தொடர்ந்து கூடியது.

பின்னர் நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அவசரகால நீடிப்புப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்வதற்காக உறுப்பினர்கள் தமது கூட்டத்தை இடைநிறுத்தினர். மீண்டும் மாலை 5.30 மணிக்கு கொழும்பு மாதிவெலயில் உள்ள எம்.பிக்களின் இல்லத் தொகுதியில் சந்திரநேரு எம்.பியின் வீட்டில் கூட்டம் தொடர்ந்தது.

நேற்றிரவு 9.45 மணிவரை வெகு காரசாரமாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பின் 18 எம்.பிக்கள் கலந்து கொண்டனர்.
லண்டனில் இருக்கும் ஜெயானந்தமூர்த்தி, சந்திரநேரு, இந்தியாவில் தங்கி நிற்கும் கனகசபை, தடுப்புக்காவலில் உள்ள கனகரட்ணம் ஆகியோர் கூட்டத்தில் பங்குபற்ற இயலவில்லை.

கருத்துச் கலாசாரம்
கூட்டத்தின் முடிவு குறித்து தமிழ் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தனிடம் கேட்டோம். "காரசாரமாகப் பலதரப்புக் கருத்துகளும் முன்வைக்கப்பட்டன. தமது தற்போதைய ஆட்சியை நீடிப்பதற்காக மக்களிடம் ஆணை கேட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வந்துள்ளார். அதற்கு இடமளிக்கக் கூடாது. அந்த ஆணையை அவருக்கு வழங்கக் கூடாது.

அதை நிராகரிக்கும்படி எமது மக்களைக் கோர வேண்டும் என்ற முடிவு முதலில் ஏகமனதாக எட்டப்பட்டது."

"அதையடுத்து இரண்டாவது கருத்து ஒன்று கூட்டத்தில் கலந்துகொண்ட பலராலும் முன்வைக்கப்பட்டது. அது இத்தேர்தலில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களையுமே ஆதரிக்கக் கூடாது என்பதாக இருந்தது. பலரின் கருத்து அதுவாக இருந்த போதிலும் இதனை ஒட்டி நான் அனைவருக்கும் விளக்கம் அளித்தேன். இறுதியாக, எமது முதலாவது தீர்மான விடயத்தை அதாவது

தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி நீடிப்புக்கான ஆணைக் கோரிக்கையை நிராகரித்துத் தோற்கடிக்கச் செய்ய வேண்டும் என்ற முடிவை எட்டுவதற்காக, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. இது குறித்து இன்று புதன்கிழமை காலை பத்திரிகையாளர் மாநாடு கூட்டி முடிவை அறிவிப்போம்'' என்றார் சம்பந்தர்.

எதிரும் புதிருமான பல கருத்துக்கள்
"இவ்விடயம் குறித்து ஆராயப்பட்ட போது எதிரும் புதிருமாகப் பல கருத்துகள் முன்வந்தன. ஆனால் இறுதி முடிவு ஏகமனதானது'' என்றார் கூட்டமைப்பின் மற்றொரு சிரேஷ்ட உறுப்பினர்

ஒருவர். இந்த முடிவை எட்டுவதற்கு முட்டுக்கட்டை போடும் விதமான கருத்துக்கள் ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம், கஜேந்திரகுமார், கஜேந்திரன் போன்றோரிடம் இருந்து வந்து கொண்டிருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டது. எனினும் கூட்டத்தில் கலந்து கொண்ட ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் தெரிவிக்கும் முடிவுக்குத் தாங்கள்
அனைவரும் கட்டுப்படுகின்றனர் என்று தொடர்ந்து தெரிவித்து வந்தமையால், இறுதியில் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவை சம்பந்தர் அறிவித்த போது, அதற்கு எல்லோரும் கட்டுப்பட வேண்டியதாயிற்று எனச் சுட்டிக்காட்டப்பட்டது.

இணக்க ஆவணம் வாசிக்கப்பட்டது
தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக சரத் பொன்சேகா, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் தாம் கண்டுள்ள இணக்கம் குறித்து இக்கூட்டத்தில் சம்பந்தர் விளக்கினார்.

அது தொடர்பான ஆவணத்தை அவர் கூட்டத்தில் வாசித்ததோடு அதன் மூலப்பிரதியையும் அங்கு காட்டினார். எனினும் அதன் பிரதி அங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை.
மூலப் பிரதியில் சரத் பொன்சேகாவும், ரணிலும் மட்டும் கையொப்பமிட்டிருக்கின்றனர். சம்பந்தர் அதில் ஒப்பமிடவில்லையே என்று ஸ்ரீகாந்தா அணி ஆட்சேபம் கிளம்பியதாகத் தெரிகின்றது.

எனினும் இது ஒப்பந்தம் அல்ல, எங்களுக்கு அவர்கள் தந்த உறுதியுரை ஆவணம் மட்டுமே என்று சம்பந்தர் அதற்கு விளக்கமும் பதிலும் தந்தார் எனத் தெரிகிறது.

இனப்பிரச்சினைக்கான தீர்வுயோசனை தொடர்பிலும் அதில் உள்ள சில விடயங்களை ஒட்டி அடிப்படைப் பிரச்சினைகளை இதே தரப்பினர் கிளப்பினர் எனத் தெரியவந்தது. தீர்வு ஒற்றையாட்சி முறைக்குள்ளா அல்லது அதற்கு வெளியிலா என்பது இந்த ஆவணத்தில் தெளிவாக வரையறை செய்யப்படவில்லை என்று குறை கூறி அவர்கள், இந்த அடிப்படையில் தாங்கள் ஏமாற்றப்படலாம் என்றும் எச்சரிக்கை செய்தனர். அது குறித்து சம்பந்தன் எம்.பி. மாவை சேனாதிராசா எம்.பி. போன்ற மூத்த தலைவர்கள் கொடுத்த விளக்கம் பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகத் தெரிய வந்தது. சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் தீர்மானத்தை தமிழ்க் கூட்டமைப்பு ஏகமனதாக எடுத்துள்ளது என்று நேற்றிரவு கூறப்பட்டாலும், இன்று அது பற்றிய
அறிவிப்பை வெளியிடும் பத்திரிகையாளர் மாநாட்டில், கூட்டமைப்பில் அங்கம் பெறும் சகல கட்சிகளினதும் தலைவர்களும் பங்குபற்றினால்தான் அது உறுதியாகும் என்றார் கூட்டமைப்பின் மற்றொரு எம்.பி.
================
உடனடி மீட்சி நடவடிக்கை குறித்து பொன்சேகா ஒப்பமிட்டு ஆவணம்
யாழ் உதயன் 2010-01-06 07:08:45
ஜனாதிபதியாகத் தாம் தெரிவு செய்யப்படும் பட்சத்தில் தற்போது நடைமுறையிலுள்ள அவசரகாலச் சட்டத்தைத் தாம் நீக்குவார் என..எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உறுதியளித்துள்ளதுடன் வடக்குக் கிழக்கில் செயற்படும் ஆயுதக் குழுக்களை உடனடியாகக் கலைப்பார் என்றும் தெரிவித்திருக்கின்றாராம்.

சரத் பொன்சேகா தான் கைச்சாத்திட்டுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கையளித்துள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரண நடவடிக்கைகள் குறித்த ஆவணத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

தகுந்த ஆதாரங்களின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் ஒருமாத காலத்திற்குள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது. அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:

1. சிவில் நிர்வாகத்தையும் இயல்பு நிலையையும் ஏற்படுத்துதல்:


•கிராமசேவையாளர் அலுவலகம் முதற்கொண்டு அனைத்து சிவில் நிர்வாகக் கட்டமைப்புகளையும் மீள ஏற்படுத்துதல் இராணுவ, பொலிஸ் மற்றும் அரசியல் தலையீடுகளிலிருந்து விடுவித்தல்.
• ஒவ்வொரு பிரதேசத்திற்கும் அதன் பிரதேச செயலாளர் தலைமையிலான குழுவொன்று அமைக்கப்படும். இக்குழுவில் ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவர் பிரதேச செயலாளர்கள் ஏனைய அதிகாரிகள்
நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களது பிரதிநிதிகள் உள்ளூர் அதிகார சபைகளின் பிரதிநிதிகள் நீதித்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் படையினர், அதன் தளபதிகள் வடக்குக் கிழக்கிற்கான அதிகாரிகள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் அதிகாரிகள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெறுவர்.

இவர்கள் ஒருமாத காலத்திற்குள் உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாட்டுத் திட்டமொன்றை உருவாக்குவர். இதில் ஏற்படும் முன்னேற்றம் குறித்த மாதாந்த அறிக்கைகள் ஜனாதிபதி, அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றிற்குச் சமர்பிக்கப்படும். இதில் ஏற்படும் முன்னேற்றத்தைக் கண்காணித்து அது நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்வதற்காக
ஜனாதிபதியின் கீழ் செயலகமொன்று அமைக்கப்படும்.
• உடனடியாக ஜனாதிபதி செயலணியொன்றை அமைத்தல்.
• தேசியப் பாதுகாப்பைக் கருத்தில் எடுத்த பின்னர், பாதுகாப்புப் படையினரைக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் மாத்திரம் நிறுத்துதல். பாதுகாப்புப் படையினரை மீள நிறுத்தும் போது உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல்.
•பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸாரின் தலையீடு இன்றி அனைவரும் நடமாடுவதற்கான சுதந்திரத்தை உறுதி செய்தல்.
• தமிழ் பேசக்கூடிய பொலிஸாரை சாத்தியமான அளவிற்குப் பணியில் ஈடுபடுத்தல்.
11. துணை இராணுவக் குழுவினர் மற்றும் ஆயுதக் குழுக்களைத் தடைசெய்தல்.

•அனைத்துத் துணை இராணுவக் குழுவினரையும் ஆயுதமேந்திய குழுவினரையும் உடனடியாகக் கலைத்தல்.
•பொதுமக்கள் வாழும் பகுதிகளை ஆயுதங்கள் அற்ற பகுதிகளாக்குதல்.
•படையினர், பொலிஸாரைத் தவிர அனுமதிப்பத்திரம் வைத்துள்ளவர்கள் மாத்திரம் துப்பாக்கிகளை வைத்திருக்க அனுமதிக்கப்படுவர்.
111. இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுதல், புனர்வாழ்வளித்தல்.

•நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பிரிவினர் ஊடாக இந்த நடவடிக்கையைத் துரிதப்படுத்தல்.
•இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்படுவர். வீடுகள் அழிக்கப்பட்டவர்களுக்கு வேறு தங்குமிடங்கள் வழங்கப்படும். மேலும் தம்மை மீளக்கட்டியெழுப்பவும், வாழ்வாதாரத்தை மீண்டும் ஏற்படுத்தவும் நிதியுதவி வழங்கப்படும்.
•அத்தியாவசிய உணவு வழங்கப்படும். மருத்துவ நிலையங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் போன்ற சமூக உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

IV. நிலமும் விவசாயமும்

•தற்போது பாதுகாப்புப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அனைத்துத் தனியார் நிலங்களும் உரியவர்களிடம் மீள ஒப்படைக்கப்படும்.
•மேலே குறிப்பிடப்பட்ட குழுக்கள் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்.
•கட்டடங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான நஷ்டஈட்டை அரசு வழங்குவதற்கான திட்டமொன்றைக் குழு முன்வைக்கும்.
* பின்வரும் குழுவினர் தொடர்பாக ஆராய்ந்து நீதியான, சட்டரீதியான தீர்வு காணப்படும்.
(அ) அரசிற்கு உரிய காணிகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள்.
(ஆ) அரச காணிகளில் இருப்பதற்கு உரித்திருந்தும் உரிமை மறுக்கப்பட்டவர்கள்.
(இ) அரச காணிகளை சட்ட விரோதமாக ஆக்கிரமித்தவர்கள்.
(ஈ) அரச காணிகளைக் கண்மூடித்தனமாக பாரதீனப்படுத்தல் நிறுத்தப்படும். இதுவரை இடம்பெற்றவைகள் குறித்து மீள ஆராயப்படும். அத்தகைய பாரதீன நடவடிக்கை நிறுத்தப்படும்.
அரச காணிகள் வெளியாருக்குப் பாரதீனப்படுத்தப்பட்ட விடயத்தில்
வெளிப்படையாக மேற்கொள்ளப்படாத சகலருக்கும் சம வாய்ப்பை வழங்காத மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அந்தந்தப்பகுதி பிரதிநிதிகளுடன் உரிய ஆலோசனை மேற்கொள்ளப்படாத
தேவையற்ற ஊழல் இடம்பெற்ற காணிக் கையளிப்பு விடயங்களிலேயே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும்.
V. மீன்பிடித்துறை

•மீன் பிடிப்பதற்கான முழுமையான உரிமை வழங்கப்படும்.
•பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக மீன்பிடித் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் கடற்படையைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்படும்.
VI. வியாபார, வர்த்தகம்

•பயணிகள் செல்வதற்கும் பொருள்கள், விவசாயம், மீன்பிடித்துறைப் பொருட்கள் கொண்டுசெல்வதற்குமான சகல கட்டுப்பாடுகளும் நீக்கப்படும்.
•கப்பம் பெறுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
VII. போக்குவரத்து

•ரயில் சேவை, யாழ். குடாநாட்டிற்குள் எவ்வித தாமதமுமின்றி மீள ஏற்படுத்தப்படும்.
•கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்திற்கான சகல தடைகளும் அகற்றப்படும். இவற்றிற்கான கட்டணங்களும் குறைக்கப்படும்.
•பருத்தித்துறையிலிருந்து திருகோணமலை வரை தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் புதிய ரயில் பாதை அமைக்கப்படும்.
VIII. விசேட நிவாரணத் திட்டங்கள்

•யுத்தத்தின் போது கொல்லப்பட்டவர்களில் தங்கியிருப்பவர்களுக்கு
•யுத்தம் காரணமாக அங்கவீனர்களானவர்களுக்கு விசேட நிவாரணத்திட்டம் முன்னெடுக்கப்படும்.
IX. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள்

•குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரமில்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் ஒருமாதத்திற்குள் விடுவிக்கப்படுவர்.
•யுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்குப் பொதுமன்னிப்பு அடிப்படையில் புனர்வாழ்வளித்தல்.
==============
பிரபாகரனை 2009 மாவீரர் உரை நடத்த விடமாட்டேன் என வாக்குறுதி அளித்தேன் அதனை செய்தேன்: சரத்பொன்சேகா
திகதி: 06.01.2010 // தமிழீழம்
2008 ம் ஆண்டு நான் இரண்டு வாக்குறுதிகளை அளித்தேன். ஒன்று இந்த யுத்தத்தினை அடுத்த இராணுவ தளபதிக்கு விடமாட்டேன் என்றேன் அடுத்ததாக புலிகளின் தலைவர் பிரபாகரனை

2009 மாவீரர் நாள் உரையினை நடத்த விடமாட்டேன் என கூறினேன்.

இந்த இரண்டு வாக்குறுதிகளையும் நான் நிறைவேற்றினேன். பயங்கரவாதத்தினை பூண்டோடு அளித்தேன். இவ்வாறு கூறினார் சரத்பொன்சேகா. இன்று காத்தான்குடியில் நடந்த தேர்தல் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சரத்பொன்சேகா இவ்வாறு கூறினார்.

இந்த யுத்தத்தில் கிழக்கு வாழ் இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் என்பதனை நான் அறிவேன். ஆனால் இனிமேல் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது காரணம் போர் ஓய்ந்துவிட்டது.
ஆனால் மஹிந்த அரசு இப்போதும் போர் நடைபெறுவது போன்ற தோற்றப்பாட்டினை காட்டுகின்றது. என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். இதே வேளை 55 வீத வாக்குகளை பெற்று

சரத்பொன்சேகா வெற்றிபெறுவார் என ஐக்கியதேசிய கட்சியின் பொதுசெயலர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்துள்ளார்.
=======================
புதன், ஜனவரி 6, 2010 03:16 பதிவு இணையம் (செய்தி அலசல்)
சரத்பொன்சேகாவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு! இழுபறிக்குள் இறிதி முடிவு!

எதிர்வரும் 26-01-2010 அன்று இலங்கையில் நடைபெறவுள்ள ஐனாதிபதித் தேர்தல் தொடர்பாக எத்தகைய தீர்மானம் எடுப்பது என்பது தொடர்பாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் காணப்பட்ட இழுபறி ஒருவாறு இன்று முடிவுக்கு வந்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் அதன் தலைவர் இரா சம்பந்தன் தலைமையில் இன்று 5-1-2010 கொழும்பில் நான்கு மணிநேரம் நடைபெற்றுள்ளது. அந்தக் கூட்டத்தில் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த 18 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஐனாதிபதி மகிந்த ரர்ஐபக்ச அவர்களை எந்தக் காரணத்தினாலும் ஆதரிக்க முடியாது ஆதரிக்க கூடாது என்ற கருத்தினை எவ்வித விவாதமும் இன்றி ஏகமானதாக ஏற்றுக் கொண்டிருந்தனர்.

தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா, கே.துரைரட்ணம், தோமஸ் வில்லியம், சொலமன் எஸ் சிறில், செல்வி தங்கேஸ்வரி கதிர்காமன், இமாம், சிவசக்திஆனந்தன், அரியநேத்திரன், சுரேஸ்பிறேமச்சந்திரன் உள்ளிட்ட 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்படல் வேண்டும் என்ற கருத்தினை ஆணித்தரமாக
வலியுறுத்தியதுடன் அதற்காக ஜெனரல் சரத்பொன்சேகா அவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்க வேண்டும் என வலியுறுத்தியதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை எடுக்கும் முடிவுகளை தாம் முழுமையாக ஏற்றுக் கொள்ளுவதாகக் கூறினர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம், ஸ்ரீகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் இரண்டு வேட்பாளர்களுக்கும் வாக்களிக்குமாறு கோரமுடியாது என்ற கருத்தினை வலியுறுத்தியதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையினை கருத்தில் கொண்டு பெரும்பான்மை உறுப்பினர்கள் எடுக்கும் தீர்மானத்திற்கு எதிராகசெயற்படப் போவதில்லை எனவும் கூறினர்.

சிவநாதன் கிசோர், திருமதி பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் மகிந்தராஐபக்ச மற்றும் சரத்பொன்சேகா ஆகிய இருவருக்கும் வாக்களிக்க முடியாது என்றும் ஆனாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையினைகருத்தில் கொண்டு பெரும்பான்மை உறுப்பினர்கள் எடுக்கும் முடிவக்கு எதிராக செயற்பட மாட்டோம் எனவும் கூறினர்.

செல்வராசா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகிய இருவரும் மகிந்தராஐபக்ச மற்றும் சரத்பொன்சேகா ஆகிய இருவரையும் ஆதரிக்க முடியாது என்றும் இந்த தேர்தலை பயன்படுத்தி தமிழ் தேசம் ஓர் தனித்துவமான தேசம் என்பதனை வெளிப்படுத்தும் சாதகமாக பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தமிழ் தேசத்திலுள்ள மக்கள் இத் தேர்தலை

புறக்கணிக்க வேண்டும் என்றும் சிங்கள தேசத்தில் வாழும் அனைத்து மக்களும் ஐனாதிபதி வேட்பாளராக போட்டியிடுபவரும் தமிழ் மக்களின் தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை என்பவற்றினை அங்கீகரித்து அதற்கு ஆதரவாக நீண்டகாலமாக உழைத்துவருபவருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே தமது
நிலைப்பாடு என்றும் ஆனாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையினை கருத்தில் கொண்டு பெரும்பான்மை உறுப்பினர்கள் எடுக்கும் முடிவுக்கு எதிராக தாம் செயற்பட மாட்டோம் எனவும் கூறினர்.

இக் கூட்டத் தொடரில் நேரில் கலந்து கொள்ள முடியாத நிலையில் கூட்டத்தின் போது தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு கருத்து தெரிவித்த ஜெயானந்தமூர்த்தி அவர்கள் தனது நிலைப்பாடு இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கும் ஆதரவளிக்க கூடாது எனக் கூறியுள்ளார்.

இறுதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரத்பொன்சேகாவை ஆதரிப்பது என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு முடிவுக்கு 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன்பாடில்லாத போதும் கூட்டமைப்பின் ஒற்றுமை பேணப்பட வேண்டும் என்ற ஒரே ஒரு காரணத்திற்காகவே அவர்கள் எதிர் நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்றும் அறிய முடியகின்றது.

No comments:

Post a Comment

Xi meets Sri Lankan PM

This handout photograph released by Sri Lanka Prime Minister’s Office on March 27, 2024 shows Sri Lanka’s Prime Minister Dinesh Gunawardena ...